ஈரோடு விஜய் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு.. மாற்று இடம் தேடும் செங்கோட்டையன்!!
Tvk Vijay erode meet: கரூர் துயரச் சம்பவத்தை தொடர்ந்து, விஜய் கூட்டம் என்றாலே, அதிகளவில் கூட்டம் வரும் என்ற அச்சத்தில், பல்வேறு இடங்களிலும் அவரது பொதுக்கூட்டத்திற்கும், ரோடு ஷோவுக்கும் காவல்துறை அவருக்கு அனுமதி மறுத்து வருகிறது. அந்தவகையில், தற்போது ஈரோடு பொதுக்கூட்டத்திற்கான இடத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய்
ஈரோடு, டிசம்பர் 08: ஈரோட்டில் வரும் 16 ஆம் தேதி நடைபெற இருந்த விஜய் பிரசார பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால், பொதுக்கூட்டத்திற்கான மாற்று இடத்தை தேர்வு செய்ய, செங்கோட்டையன் தவெக நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்தையும் தீவிரப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், இந்த தேர்தலில் முதன் முதலாக தவெக போட்டியிட உள்ளது. இதையொட்டி, அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறார். கரூர் துயரச் சம்பவம் காரணமாக ஏற்கெனவே, அவர் மேற்கொண்டு வந்த சுற்றுப்பயணம் இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெறாமல் உள்ளதால், புதிய திட்டங்களுடன் அவர் மீண்டும் தனது பயணத்தை தொடங்க உள்ளார்.
இதையும் படிக்க : அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவும் 6 முக்கிய புள்ளிகள்…யார் அவர்கள்!
நாளை புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்:
அந்தவகையில், நாளை அவர் புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்த பொதுக்கூட்டத்திற்கு தமிழ்நாட்டினர் கலந்துகொள்ளக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, புதுச்சேரியை சேர்ந்த 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும், மேலும் அனுமதி பெறுபவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கியூஆர் கோடுகளுடன் கூடிய பாஸ் வழங்க வேண்டும். பாஸ் வைத்திருப்பவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் போன்ற கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முதலில் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில், புதுச்சேரி காவல்துறை அதற்கு அனுமதி மறுத்தது. தவெக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், புதுச்சேரி முதல்வரை தனிப்பட்ட முறையில் சந்தித்து அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. கரூர் துயரச் சம்பவத்தை தொடர்ந்து, விஜய் கூட்டம் என்றாலே, அதிகளவில் கூட்டம் வரும் என்ற அச்சத்தில், பல்வேறு இடங்களிலும் அவரது பொதுக்கூட்டத்திற்கும், ரோடு ஷோவுக்கும் காவல்துறை அவருக்கு அனுமதி மறுத்து வருகிறது.
ஈரோட்டு பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு:
அந்தவகையில், ஈரோட்டில் வரும் 16 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்த தவெக திட்டமிட்டு வருகிறது. இந்த பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அக்கட்சியில் புதிதாக இணைந்துள்ள செங்கோட்டையன் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், நேற்றைய தினம் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து ஈரோடு ஆட்சியர் கந்தசாமியை சந்தித்து, வரும் 16ஆம் தேதி விஜய்யின் பிரசார பொதுக்கூட்டத்துக்கு அனுமதி பெற மனு அளித்தார். பின்னர், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி பெற மனு சமர்ப்பிக்கப்பட்டது.
இதையும் படிக்க: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடங்கியது.. டிச.11ல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு!!
மாற்று இடம் தேடும் செங்கோட்டையன்:
இதற்கிடையில், விஜய் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்ட பவளத்தாம்பாளையில் உள்ள 7 ஏக்கர் காலி இடத்தை, போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர். இடப்பற்றாக்குறை காரணமாக அங்கு அனுமதி மறுக்கப்பட்டதால், மாற்று இடத்தை தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து, பெருந்துறை அருகே மாற்று இடத்தை தேர்வு செய்ய செங்கோட்டையன் மற்றும் தவெக நிர்வாகிகள் தீவிர ஆலோசனை நடத்தினர். பின்னர், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தேர்வு செய்யப்பட்ட மாற்று இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி மீண்டும் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.