Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

“கொஞ்சமா பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர்”.. திமுகவை சரமாரியாக சாடிய விஜய்!!

கடந்த 3 நாட்களாக சென்னையில் பெய்து வரும் கனமழைக்கே நகரின் முக்கியப் பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக வடசென்னையில் மழை நீர் தேக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மழை நீர் தேங்கியது குறித்து விஜய் குரல் எழுப்பியுள்ளார்.

“கொஞ்சமா பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர்”.. திமுகவை சரமாரியாக சாடிய விஜய்!!
சென்னையில் தேங்கிய மழை நீர்,
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 03 Dec 2025 15:36 PM IST

சென்னை, டிசம்பர் 03: மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள தவெக தலைவர் விஜய், மக்கள் மீது சிறிதேனும் அக்கறை இருந்திருந்தால் கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது என்று திமுகவை சரமாரியாக விமர்சித்துள்ளார். தித்வா புயல் எதிரொலியாக தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், வட சென்னையில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதோடு, தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் சென்றதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து, தலைநகரில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதையும் படிக்க : தொடர் மழையால் ஸ்தம்பித்த சென்னை.. பல்வேறு பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்..

காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழப்பு:

இதனிடையே, சென்னை அருகே மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மேலும் வலுவிழக்கக்கூடும் என்றும் கூறியுள்ளது. அதேசமயம், காற்றழுத்த பகுதியாக வலுகுறைந்தாலும், தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமாக உள்ளதாகவும், இதனால் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு:

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே மக்களின் இந்தத் துயரத்திற்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

தவெகவினருக்கு விஜய் உத்தரவு:

பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், மழையால் பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களுக்குத் தேவையான உதவிகளைப் பாதுகாப்போடு செய்திட வேண்டும் என்று கழகத் தோழர்களைக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிக்க:2026ல் மக்களின் ஆதரவுடன் “விஜய் ஆட்சிக்கு வருவார்”.. செங்கோட்டையன் உறுதி!!

நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் முடிக்கவில்லை:

மேலும், மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை என்றும், மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால் கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது எனவும் அவர் சாடியுள்ளார். அதோடு, மீதமுள்ள பருவமழைக் காலத்திலாவது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையிலும், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் மழைநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அரசை வலியுறுத்தியுள்ளார்.