கரூர் கொடூரம்.. சுயாதீன விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் நாடும் த.வெ.க..
Karur Stampede: தமிழக வெற்றி கழகம் தரப்பில் சுயாதீன விசாரணை மேற்கொள்ள கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த துயர சம்பவம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் விஜய் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

கோப்பு புகைப்படம்
சென்னை, செப்டம்பர் 28, 2025: கரூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து சுயாதீன விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக தமிழக வெற்றி கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் செப்டம்பர் 27, 2025 தேதியான நேற்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது இரவு 7 மணி அளவில் கரூர் சென்றடைந்த அவர், ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த நிலையில் உரையாற்றினார். அவர் உரையாற்றும் போது சிலர் மயங்கி விழத் தொடங்கினர். பின்னர் கூட்டத்தில் இருந்த சிலர் தண்ணீர் கேட்டதால், அவரது பிரச்சார வாகனத்தில் இருந்து தண்ணீர் பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டது.
விஜய் உரையின் போதே மயங்கி விழுந்த மக்கள்:
அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, இரண்டு முதல் மூன்று ஆம்புலன்ஸ்கள் தொடர்ந்து அந்த பகுதி வழியாக சென்றது. ஆம்புலன்ஸ்க்கு வழிவிடுமாறு கூறி தனது உரையை முடித்துக்கொண்டு விஜய் அங்கிருந்து புறப்பட்டார். அதிகமான மக்கள் குறுகிய இடத்தில் கூடியிருந்ததாலும், காலை முதலே குடிநீரின்றி உணவின்றி இருந்ததாலும், மூச்சு விட சிரமமாக இருந்த மக்கள் அங்கிருந்து எப்படியாவது வெளியேற வேண்டும் என ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு முன்னேறினர்.
மேலும் படிக்க: கரூர் கொடூரம்.. உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி.. தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
கூட்ட நெரிசல் ஏற்பட்டு 39 பேர் உயிரிழப்பு:
அப்போது எதிர்பாராத முறையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதுடன், குழந்தைகள், பெண்கள் என 39 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கியது. சம்பவத்துக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசல்.. உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு
தமிழக அரசு தரப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதே சமயம், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் மத்திய அரசு தரப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
சுயாதீன விசாரணை மேற்கொள்ள நீதிமன்றத்தை நாடும் தவெக:
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் தரப்பில் சுயாதீன விசாரணை மேற்கொள்ள கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த துயர சம்பவம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் விஜய் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழக வெற்றி கழகம் தரப்பில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு தரப்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஏற்கனவே தனிநபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையை பொறுத்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.