இன்று நடக்கும் த.வெ.க சிறப்பு பொதுக்குழு கூட்டம்.. மாஸ்டர் பிளான் போடும் விஜய்? நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் என்ன?

TVK General Body Meet: தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட் நட்சத்திர விடுதியில் இந்த பொதுக்குழு கூட்டம் காலை 9 மணிக்கு தொடங்க இருக்கிறது. இதில் சுமார் 2,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று நடக்கும் த.வெ.க சிறப்பு பொதுக்குழு கூட்டம்.. மாஸ்டர் பிளான் போடும் விஜய்? நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் என்ன?

கோப்பு புகைப்படம்

Published: 

05 Nov 2025 06:30 AM

 IST

சென்னை, நவம்பர் 5, 2025: தமிழக வெற்றிக்கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (நவ. 5, 2025) கூடுகிறது. இதில் தலைவர் விஜய் உரையாற்றுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழலில், தமிழக வெற்றிக்கழகம் தரப்பிலும் தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக, செப்டம்பர் 27, 2025 அன்று தலைவர் விஜய் கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய இரண்டு மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கரூர் மாவட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அந்தச் சம்பவத்துக்குப் பின் சுமார் ஒரு மாத காலத்திற்கு எந்த அரசியல் நகர்வுகளும் அந்தக் கட்சி தரப்பில் மேற்கொள்ளப்படவில்லை.

ஒரு மாத இடைவெளிக்கு பின் மீண்டும் அரசியல் நடவடிக்கைகள்:

ஒரு மாத காலத்திற்குப் பிறகு, அக்டோபர் 27ஆம் தேதி சென்னை மாமல்லபுரத்தில், கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். முன்னதாக, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. கூட்ட நெரிசலைத் தொடர்ந்து ஒரு மாத காலம் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் மற்றும் கட்சியின் அரசியல் நகர்வுகள் முற்றிலுமாக முடங்கியது. இது பெரும் பேசுபொருளாக மாறியது. ஆனால் அக்டோபர் 27, 2025 முதல் அவர் மீண்டும் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார்.

Also Read: கோவை சம்பவம் : இப்படி ஒரு சம்பவம் யாருக்கும் நேரக்கூடாது – துணை குடியரசுத் தலைவர் கண்டனம்

அடுத்த அடுத்த மூவ் – மாஸ்டர் பிளான்:

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், கட்சியின் அன்றாட பணிகளை மேற்கொள்வதற்காக பொதுச்செயலாளர் என். ஆனந்த் மற்றும் 28 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை அவர் நியமித்தார். அதனைத் தொடர்ந்து தொண்டரணி, மகளிர் அணி, இளைஞரணி, மாணவரணி ஆகியவற்றிற்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இந்த சூழலில், கரூர் சம்பவத்தை அடுத்து தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

Also Read: குற்றவாளிகளை பிடிக்க தாமதமானது ஏன்? காவல் ஆணையர் விளக்கம்

அந்த சுற்றுப்பயணத்தை மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டு வருகின்றன. சுற்றுப்பயணத்தின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் தலைமையில் ‘மக்கள் பாதுகாப்புப் படை’ புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

சிறப்பு பொதுக்குழு கூட்டம்:

இந்த சூழலில், தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட் நட்சத்திர விடுதியில் இந்த பொதுக்குழு கூட்டம் காலை 9 மணிக்கு தொடங்க இருக்கிறது. இதில் சுமார் 2,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில், ஒவ்வொரு உறுப்பினருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அந்த அடையாள அட்டை காட்டினாலே மட்டுமே உள்ளே அனுமதி வழங்கப்படும். மேலும், ஊடகங்கள் நேரலையில் ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகளும் தனியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் என்ன?

சுமார் ஒன்றரை மாத காலத்திற்குப் பிறகு, தலைவர் விஜய் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் 2026 தேர்தல் பணிகள் குறித்தும், மக்கள் பிரச்சினைகள் குறித்தும், குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றியும், திமுக அரசை எதிர்த்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதும், பொதுக்குழு கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் உரையாற்றுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.