சிபிஐ முதல் கட்ட விசாரணை நிறைவு…சென்னை புறப்பட்டார் விஜய்…ஜன.19-இல் மீண்டும் ஆஜர்?
Tvk leader Vijay: டெல்லியில் நடைபெற்ற சிபிஐ விசாரணையை முடித்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். பொங்கல் முடிந்து ஜனவரி 19- ஆம் தேதி மீண்டு விஜய் ஆஜராககோரி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை திரும்புகிறார் தவெக தலைவர் விஜய்
கரூரில் வேலுச்சாமிபுரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கோரி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன் பேரில், நேற்று திங்கள்கிழமை ( ஜனவரி 12) தனி விமான மூலம் சென்னையில் இருந்து டெல்லி சென்றார். அங்கு நேற்று காலை 11:30 மணியளவில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் விஜய் ஆஜராகினார். அவரிடம், சுமார் 7 மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. அதற்கு, விஜய் பதிலளித்திருந்தார். இந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை ( ஜனவரி 13) சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடைபெற இருந்தது. ஆனால், பொங்கல் பண்டிகைக்கு பிறகு சிபிஐ விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்ற சிபிஐ அதிகாரிகள் இன்று நடைபெற இருந்த விசாரணையை ஒத்தி வைத்தனர்.
சென்னைக்கு புறப்பட்டார் விஜய்
இதைத் தொடர்ந்து, ஜனவரி 19 ஆம் தேதி ( திங்கள்கிழமை) மீண்டும் ஆஜராக வேண்டும் என்று விஜய்க்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் டெல்லி விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். அதன்படி, அவர் இன்று மாலைக்குள் சென்னை வந்தடைவார் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, பொங்கல் பண்டிகை முடிந்து, மீண்டும் சிபிஐ விசாரணைக்காக விஜய் ஆஜராக உள்ளார். கரூரில் கடந்த செப்டம்பர் 27- ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரை பயணத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.
மேலும் படிக்க: சென்னையில் ஹெலிகாப்டர் ரைடு…பொதுமக்களுக்காக சுற்றுலாத் துறையின் அசத்தல் ஏற்பாடு!
கரூர் சம்பவத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மற்ற நிர்வாகிகளான சி. டி. ஆர். நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி இருந்தனர். இதைத் தொடர்ந்து, விஜய்க்கும் சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.
முதல் கட்ட விசாரணை நிறைவு
இந்த சம்மனுக்கு வழக்கறிஞர்கள் மூலமாக பதிலளிக்கலாமா என்று சிபிஐ அதிகாரிகளிடம் கோரிக்க வைக்கப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த அதிகாரிகள் விஜய் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று சிபிஐ தலைமை அலுவலகம் தெரிவித்தது. அதன் அடிப்படையில், சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜராகி இருந்தார். 2 அல்லது 3 நாட்களுக்கு மேல் விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் கட்ட விசாரணையை முடித்துவிட்டு அவர் தற்போது சென்னை திரும்பி உள்ளார்.
மேலும் படிக்க: தமிழகம் வரும் பிரதமர் மோடி.. மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்ட நிகழ்ச்சி.. காரணம் என்ன?