கரூர் துயரம்.. த.வெ.க மாவட்ட செயலாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..

Karur Rally Stampede: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக தவெக கரூர் மாவட்ட செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் துயரம்.. த.வெ.க மாவட்ட செயலாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..

கோப்பு புகைப்படம்

Published: 

28 Sep 2025 06:40 AM

 IST

கரூர், செப்டம்பர் 28, 2025: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் செப்டம்பர் 13, 2025 முதல் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். முதல் தின பிரச்சாரமாக அவர் திருச்சி மற்றும் அரியலூரில் கலந்து கொண்டார். திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் 1000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் வாகனத்தைச் சூழ்ந்ததால், 5 கிலோமீட்டர் தூரத்தை கடப்பதற்கு 6 மணி நேரம் எடுத்துக்கொண்டது. இதனால் அன்றைய பெரம்பலூர் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது. பின்னர், ஒவ்வொரு சனிக்கிழமையிலும் இரண்டு மாவட்டங்களில் மட்டும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 20, 2025 வரை இந்த பயணம் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது. இதுவரை அவர் திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் உரையாற்றியுள்ளார்.

கரூரில் ஏற்பட்ட துயர சம்பவம்:

நாமக்கல்லில் காலை நடைபெற வேண்டிய பிரச்சாரம் கூட்டநெரிசல் காரணமாக பல மணி நேரம் தாமதமானது. பிற்பகல் 2.30 மணியளவில் விஜய் உரையாற்ற வந்தார். அதற்குள் பலர் வெயிலால் மயங்கி விழுந்தனர்; அதனை தொடர்ந்து அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உரையாற்றிய பின் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

மேலும் படிக்க: இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன் – தமிழக வெற்றிக் கழக தலைவர் இரங்கல்..

பின்னர் மாலை ஏழு மணியளவில் அவர் கரூர் மாவட்டத்திற்கு வந்தடைந்தார். கூட்டநெரிசல் காரணமாக உரையாற்றும் இடத்திற்கு செல்வது சிரமமாக இருந்ததால் பல மீட்டருக்கு முன்னதாகவே உரையாற்றினார். அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் உணவின்றி, தண்ணீரின்றி, மிகுந்த நெருக்கடியில் சுவாசிக்க சிரமப்பட்ட நிலையில் இருந்தனர். விஜய் உரை முடித்து புறப்பட்ட பின்னர், அங்கிருந்த மக்கள் வெளியேற முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 38 பேர் உயிரிழந்தனர். அதில் 8 குழந்தைகள் அடங்குவர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்:

உயிரிழந்த குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒற்றை உறுப்பினர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசல்.. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..

மாவட்ட செயலாளர் மதியழகன் மீது வழக்கு பதிவு:

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைக்கப்படலாம் என்றும், இந்த வழக்கில் தலைவர் விஜயிடமும் விசாரணை நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.