பிப்.27ல் வெளியாகும் தவெக வாக்குறுதிகள்.. இலவசங்கள் இடம்பெறுமா?.. எகிறும் எதிர்பார்ப்புகள்..
TVK election manifesto: முன்னதாக விஜய் தேர்தல் வாக்குறுதியாக, ஒவ்வொருவருக்கும் ஒரு நிரந்தர வீடு, ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பைக் நிச்சயம், ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கார் லட்சியம், ஒவ்வொரு வீட்டுக்கும் ஒருவருக்கு நிரந்தர வருமானம், ஒவ்வொரு வீட்டுக்கும் ஒருவர் கட்டாயம் பட்டப்படிப்பு என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்

விஜய்
சென்னை, பிப்ரவரி 17: சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில் தவெக தேர்தல் அறிக்கை பிப்.27ம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. மக்கள் சந்திப்பு, கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர்கள் தேர்வு, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என பரபரப்பாக இயங்கி வருகின்றன. இதனிடையே, தேர்தல் வாக்குறுதிகள் தயாரிக்க திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட மூன்று கட்சிகளும் முழு அமைத்துள்ளன. இந்த குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டுப்பெற்றன.
மேலும் படிக்க: “எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை விஜய் பயன்படுத்தக்கூடாது”.. திண்டுக்கல் சீனிவாசன்..
தவெக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு:
அந்தவகையில், தவெக சார்பில் 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை விஜய் உருவாக்கியிருந்தார். இதில் அந்தக் கட்சியின் கொள்கை பிரிவு பொதுச்செயலாளர் அருண்ராஜ், ராஜ்மோகன் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். சமீபத்தில் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் கூட அந்த குழுவில் இடம்பெற்றிருந்தார். ஆனால் மிகுந்த அரசியல் அனுபவம் பெற்ற தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், அக்குழுவில் இடம்பெறாதது பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது.
பொதுமக்கள் கருத்து தெரிவிக்க இணையதளம்:
இதனிடையே, சட்டசபை தேர்தலை சந்திக்க முழுவீச்சில் தயாராகி வரும் தவெக, தேர்தல் அறிக்கை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க புதிய இணையதளமும் தொடங்கியது. தேர்தல் அறிக்கை குழுவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இணையதளத்திலும் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த கருத்துகளை தேர்தல் அறிக்கையில் இணைக்கும் பணியை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் செய்து வருகின்றனர்.
இலவசங்களுக்கு முக்கியத்துவம்?
கடந்த கால தேர்தல்களிலும், தற்போதும், திமுக, அதிமுக, தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், தவெக தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் இடம் பெறுமா? அல்லது இலவசங்கள் இல்லாத மாற்றுத் திட்டங்கள் இடம் பெறுமா? என்பது மிகுந்த எதிர்பார்ப்புமிக்கதாக மாறியுள்ளது. அந்தவகையில், தவெக தேர்தல் அறிக்கை பொதுமக்கள் விரும்பும் வகையில் பல முக்கிய அம்சங்களுடன் வருகிற 27ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் அறிக்கையை மக்கள் மத்தியில் வெளியிடுவதா? அல்லது கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் வெளியிடுவதா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி மாற்றம் – எப்போது தெரியுமா?
விஜய்யின் தேர்தல் வாக்குறுதி:
முன்னதாக கடந்த நவம்பர் மாதம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட விஜய், தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்டார். அதன்படி, ஒவ்வொருவருக்கும் ஒரு நிரந்தர வீடு, ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பைக் நிச்சயம், ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கார் லட்சியம், ஒவ்வொரு வீட்டுக்கும் ஒருவருக்கு நிரந்தர வருமானம், ஒவ்வொரு வீட்டுக்கும் ஒருவர் கட்டாயம் பட்டப்படிப்பு என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதன்மூலம் விஜய்யின் அறிவிப்புகள் தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெறுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.