டாஸ்மாக் கடைகளை திறப்பதில் சிக்கல்.. ஊழியர்கள் திடீர் முற்றுகை போராட்டம்!!
இந்தத் திட்டத்தினால் தங்களுக்குக் கடுமையான பணிச்சுமை ஏற்படுவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். "ஏறத்தாழ 23 ஆண்டு காலமாகப் பணிபுரிந்து வரும் எங்களுக்கு தற்போதும் அதிகபட்ச ஊதியமே வெறும் 14,500 ரூபாய் தான். இந்த சொற்ப ஊதியத்திற்குள் இவ்வளவு கூடுதல் வேலைகளை எங்களால் செய்ய இயலாது" என ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் பணிச்சுமை மற்றும் ஆள் பற்றாக்குறையைக் கண்டித்து, டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளைத் திறக்காமல் அதிரடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக மதியம் 12 மணி வேளையில் கடைகள் திறக்கப்பட வேண்டிய நிலையில், ஊழியர்களின் இந்த திடீர் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாகக் கடைகள் அனைத்தும் திறக்கப்படாமல் முடங்கின. கடைகளைத் திறப்பதற்குப் பதிலாக, அனைத்து ஊழியர்களும் திரண்டு சென்று மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதித்தனர்.
இதையும் படிக்க: “தவெக ஆட்சி நீடிக்க ஸ்டாலின் சாமியை வேண்டிக்கொள்ள வேண்டும்”.. அமைச்சர் அருண்ராஜ்
காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம்:
அந்தவகையில், சென்னை எழும்பூர் தலைமையகத்தின் முன்பு திரண்ட ஊழியர்கள், காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் தற்போதைய நடைமுறையால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நடைமுறைச் சிக்கல்களைப் பட்டியலிட்டனர். அதன்படி, டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைப் பொதுமக்களிடமிருந்து திரும்பப் பெற்று, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன்படி மதுபானங்களை விற்கும்போது ஒவ்வொரு பாட்டிலிலும் சிறப்பு ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்யப்படுகிறது. மதுப்பிரியர்கள் மதுவை அருந்திய பிறகு, அந்த காலி பாட்டிலை மீண்டும் கடையிலேயே கொண்டு வந்து ஒப்படைக்கும் போது, ஊழியர்கள் அந்த ஸ்டிக்கரைச் சரிபார்த்துப் பெற்றுக்கொண்டு, அவர்களிடம் பணத்தைத் திரும்ப வழங்க வேண்டும்.
ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை:
இந்தத் திட்டத்தினால் தங்களுக்குக் கடுமையான பணிச்சுமை ஏற்படுவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது, வாடிக்கையாளர்கள் திரும்பக் கொடுக்கும் ஸ்டிக்கர்களைச் சரிபார்ப்பது, பணத்தைக் கணக்கிட்டுத் திரும்பக் கொடுப்பது போன்ற பணிகளைச் செய்யக் கடைகளில் போதிய ஆட்கள் இல்லை என்றும், கடுமையான ஆள் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதோடு, பொதுமக்களிடம் இருந்து திரும்பப் பெறப்படும் காலி பாட்டில்களைப் பத்திரமாக அடுக்கி வைப்பதற்கு டாஸ்மாக் கடைகளுக்குள் போதிய இடவசதி இல்லை .
அதிகபட்ச ஊதியமே ரூ.14,500 தான்:
“ஏறத்தாழ 23 ஆண்டு காலமாகப் பணிபுரிந்து வரும் எங்களுக்கு தற்போதும் அதிகபட்ச ஊதியமே வெறும் 14,500 ரூபாய் தான். இந்த சொற்ப ஊதியத்திற்குள் இவ்வளவு கூடுதல் வேலைகளை எங்களால் செய்ய இயலாது” என ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அதோடு, இந்த ஸ்டிக்கர் மற்றும் பாட்டில் திரும்பப் பெறும் பணிக்கு நிர்வாகம் உடனடியாக ஒரு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும், அதுவரை மாவட்டத்தில் உள்ள எந்தவொரு டாஸ்மாக் கடையையும் திறக்க மாட்டோம் என்றும் ஊழியர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டனர்.
இதையும் படிக்க: சர்ச்சையான அந்த சிரிப்பு.. பின்னணி இதுதான்.. ஓப்பனாக பேசிய அமைச்சர் கீர்த்தனா!
கடைகளை திறக்க அதிகாரிகள் வலியுறுத்தல்:
இதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். “முதலில் கடைகளைத் திறந்து வியாபாரத்தைத் தொடங்குங்கள், அதன் பிறகு இந்தத் தட்டுப்பாடு மற்றும் பணிச்சுமைப் பிரச்சினை குறித்து உயர்மட்டக் குழுவிடம் பேசி சுமுகத் தீர்வு காணலாம்” என்று அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனினும், ஊழியர்கள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருப்பதால் அங்கு தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.