Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை போராட்டம் ஓயாது – தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..

TN CM M.K Stalin: தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை போராட்டம் ஓயாது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் தரவுகள் எதுவுமில்லாத கற்பனையான சரஸ்வதி நாகரிகத்தை மத்திய அரசு முன்னிறுத்துவதாக அதில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை போராட்டம் ஓயாது – தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..
முதலமைச்சர் ஸ்டாலின்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 19 Jun 2025 09:12 AM

கீழடியில் 2015ஆம் ஆண்டு முதல் அகழாய்வு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அதனை மத்திய அரசு வெளியிட மறுத்து மேலும் ஆய்வுகள் தேவை என குறிப்பிட்டுள்ளது இதற்கு தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஜூன் 18 2025 அன்று திமுக மாணவர் அணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று ஜூன் 19 2025 தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் (TamilNadu CM M.K Stalin) தொண்டர்களுக்கு ஒரு மடல் எழுதியுள்ளார். அதில் தமிழர் பண்பாட்டு பெருமையை நிலைநாட்டும் வரை போராட்டம் ஓயாது என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லி வரை தொடர்ந்து எதிரொலிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கீழடி தொடர்பாக தொண்டர்களுக்கு கடிதம்:

கீழடியில் பல்வேறு கட்ட அகழாய்வு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு அதில் பல தொன்மை வாய்ந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆராய்ச்சிகளுக்கான ஆய்வு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு தற்போது வரை அதை வெளியிடவில்லை. அதற்கு மாறாக ஒரே ஒரு ஆராய்ச்சி மட்டும் எல்லாவற்றையும் மாற்றி விட முடியாது. இதற்கு கூடுதல் ஆய்வுகள் தேவை என குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் தமிழர் பண்பாட்டு பெருமையை நிலைநாட்டும் வரை போராட்டம் ஓயாது எனவும் சென்னையில் ஒலித்திருப்பது முதல் கட்டம் முழக்கம், டெல்லி வரை தொடர்ந்து எதிரொலிக்கும் என குறிப்பிட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தமிழர்களின் பண்பாடு மிகவும் தொன்மையானது:


அதில், ” கீழடியில் நடந்த அகழாய்வுகள், தமிழர்களின் நாகரிகம் தனித்துவமான நாகரிகம் என்பதையும், தமிழர்களின் பண்பாடு மிகவும் தொன்மையானது என்பதையும் ஆதாரப்பூர்வமாக மெய்ப்பித்த அகழாய்வாகும். அகழாய்வில் மொத்தம் 5,300 பொருள்கள் இதுவரை கிடைத்துள்ளன. இதன் மூலம் சங்க காலத் தமிழகம் நகர்ப்புற நாகரிகத்தை கொண்டதல்ல என்ற கருத்து தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் பணிகளை மேற்கொண்ட இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை அசாம் மாநிலத்திற்கு இடமாறுதல் செய்து தமிழ்ப் பண்பாட்டின் மீதான வெறுப்புணர்வை பா.ஜ.க. அரசு அப்பட்டமாகக் காட்டியது. எனினும், அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் 2016-இல் கீழடி அகழாய்வு குறித்த தொடக்க அறிக்கையையும், 2017-ஆம் ஆண்டில் இடைநிலை அறிக்கையையும் இந்திய அரசின் தொல்லியல் துறையிடம் வழங்கினார். சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு அவர் மீண்டும் வந்து பணியாற்றினார்.

சரஸ்வதி நாகரிகத்தை முன்னிறுத்தும் மத்திய அரசு:

தரவுகள் எதுவுமில்லாத கற்பனையான சரஸ்வதி நாகரிகத்தை முன்னிறுத்தி, திராவிடப் பண்பாட்டு அடையாளமான சிந்துவெளி நாகரிகத்தை அழிக்க நினைக்கும் பா.ஜ.க., இதுவரை சரஸ்வதி நாகரிகத்தை எந்தவித அறிவியல் சோதனைகள் மூலமாகவும் நிரூபிக்கவில்லை. ஆனால், தமிழர் பண்பாட்டு அடையாளமான கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள் ஒவ்வொன்றும் உலகத் தரத்திலான அறிவியல்பூர்வமான ஆய்வுக்குட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டும்கூட அதனை ஏற்பதற்குப் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு மனது வரவில்லை.

இந்த நிலையில், தமிழ்ப் பண்பாட்டின் பெருமையைக் காக்கவும், அதை நிறுவவும் வேண்டிய பெரும் பொறுப்பு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், தமிழுணர்வுகொண்ட அதன் தோழமை சக்திகளுக்கும் மட்டுமே இருப்பதால்தான், கிளம்பிற்று காண் தமிழர் கூட்டம் என்கிற வகையில் கழக மாணவரணி மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி, கீழடி ஆய்வு முடிவுகளை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

கீழடியிலும் சென்னையிலும் ஒலித்திருப்பது முதல் கட்ட முழக்கம். இது டெல்லி வரை தொடர்ந்து எதிரொலிக்கும். தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை கழகத்தின் போராட்டம் ஓயவே ஓயாது” என தெரிவித்துள்ளார்.