Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திமுக பெண் கவுன்சிலர் காலில் விழுந்த ஊழியர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ.. நடந்தது என்ன?

Tindivanam: திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில், பட்டியல் இனத்தை சேர்ந்த முனியப்பன் என்பவர் திமுக பெண் கவுன்சிலர் ரம்யா ராஜாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பெண் கவுன்சிலர் காலில் விழுந்த ஊழியர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ.. நடந்தது என்ன?
காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட காட்சிகள்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 03 Sep 2025 17:33 PM IST

விழுப்புரம், செப்டம்பர் 3, 2025: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில், பட்டியல் இனத்தை சேர்ந்த முனியப்பன் என்பவர் கவுன்சிலர் காலில் விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில், இளநிலை உதவியாளராக ரோசணை பகுதியை சேர்ந்த முனியப்பன் என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். கடந்த ஆகஸ்ட் 28, 2025 அன்று திண்டிவனம் நகராட்சி 20-வது வார்டு திமுக உறுப்பினர் ரம்யா ராஜா, அலுவலக பணியில் ஈடுபட்டிருந்த முனியப்பன் இடம் சென்று, தனது பகுதிக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான கோப்பினை எடுத்து வருமாறு கேட்டுக்கொண்டார். அப்போது முனியப்பன் இதற்கு சரியான முறையில் பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

பட்டியலின ஊழியரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம்:

இதனால் ஆத்திரமடைந்த திமுக கவுன்சிலர் ரம்யா ராஜா, முனியப்பனை ஒருமையில் திட்டியதாக தெரிகிறது. பின்னர், நகர மன்ற தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரன் இடமும் இது குறித்து கூறினார். அதன் பின், நகராட்சி ஆணையர் அறைக்கு துணை ஆட்களுடன் சென்ற நகர மன்றத் தலைவரின் கணவர் ரவிச்சந்திரன், முனியப்பனை மிரட்டும் தணியில் பேசியுள்ளார்.

மேலும் படிக்க: குறையும் மழை.. 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை.. எச்சரிக்கும் வானிலை ரிப்போர்ட்..

அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், நகராட்சி ஆணையர் அறையில் நின்றிருந்த முனியப்பன் திடீரென ரம்யா ராஜாவின் காலில் விழுந்து, அழுதபடி “மன்னித்து விடுங்கள்” எனக் கேட்டுக்கொண்டார். பின்னர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்:

நகராட்சி தலைவர் அறையில் பதிவான இந்த சிசிடிவி காட்சி பொதுவெளியில் கசிந்த நிலையில், பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஊழியரை கட்டாயப்படுத்தி காலில் விழ வைத்ததாக கூறி திமுக கவுன்சிலர் ரம்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிமுக மற்றும் பிற கட்சி கவுன்சிலர்கள் திண்டிவனம் டிஎஸ்பி பிரகாஷ் இடமும், நகராட்சி மேனேஜர் இடமும் புகார் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க: மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் பலி.. பிரேத பரிசோதனையில் பகீர்.. சென்னையில் சோகம்!

அண்ணாமலை கடும் விமர்சனம்:


இந்தச் சம்பவம் தொடர்பாக, தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த சம்பவம் தொடர்பான காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அதில் அவர், “இதுதான் திமுகவின் சமூக நீதிக்கான மாதிரி. திண்டிவனத்தில் உள்ள பட்டியல் இனத்தை சேர்ந்த ஒரு பொது ஊழியர், திமுக கவுன்சிலர்களால் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு, கவுன்சிலரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். சமூக நீதி என்று திமுக கூறுவது உண்மையில் சமூக அநீதியே தவிர வேறு எதுவும் இல்லை” என பதிவிட்டுள்ளார்