லீவுக்கு குற்றாலம் போக போறீங்களா? அப்போ இதை நோட் பண்ணுங்க.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..
Courtallam Falls: தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி, அக்டோபர் 18, 2025: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், அது படிப்படியாக தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இந்த நிலையில் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து மூன்றாவது நாளாக சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. “அருவிக்கரைகளுக்கு யாரும் செல்ல வேண்டாம்” என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தேனி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அக்டோபர் 18, 2025 அன்று நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் அக்டோபர் 19, 2025 அன்று சேலம், தேனி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: நஷ்ட ஈடு பிரச்னை.. அண்ணனுக்கு பதில் தம்பி கொலை
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது தீபாவளி பண்டிகையை ஒட்டி நீண்ட விடுமுறை என்பதால் பலரும் தங்கள் குடும்பத்தினருடன் குற்றாலம் செல்லத் திட்டமிட்டு இருப்பார்கள். ஆனால் தொடர் கனமழையின் காரணமாக அங்குள்ள அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
குற்றால அருவிகளில் குளிக்க தடை:
குற்றாலத்தை பொறுத்தவரையில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகிய இரண்டு காலங்களிலும் சீசன் கலைக்கட்டும். தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலிருந்து கூட மக்கள் அதிகம் வருகை தருவார்கள். மேலும் குற்றாலம் அருவிகளில் குளித்தால் உடலில் உள்ள நோய்கள் குணமாகும் என்ற நம்பிக்கையும் உள்ளது. சீசன் நேரங்களில் ஏராளமான மக்கள் இந்த அருவிகளில் குளித்து மகிழ்வது வழக்கம். ஆனால் கனமழை பெய்யும் நேரங்களில் அருவிகளில் அதிகப்படியான நீர் இருப்பதால் சில சமயங்களில் தடை விதிக்கப்படும்.
மேலும் படிக்க: தீபாவளி கூடுதல் கட்டணம்.. ஆம்னி பேருந்துகளிடம் ரூ.43 லட்சம் அபராதம் வசூல்!
அந்த வகையில் கடந்த சில தினங்களாக தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்த தடை அமலில் இருந்து வருவதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஆர்பரிக்கும் நீர்:
தென்காசியை பொறுத்தவரையில் நேற்று பகல் முதல் இன்றுவரை நல்ல மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக மெயின் அருவியில் பாதுகாப்பு வளையம் தெரியாத அளவிற்கு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதேசமயம் நீர்நிலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.