டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் எதிரொலி.. 241 பேர் சஸ்பெண்ட்! 1,700-க்கும் மேற்பட்டோருக்கு நோட்டீஸ்!
TASMAC Employees Strike: போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 241 டாஸ்மாக் ஊழியர்களைப் பணியிடை நீக்கம் செய்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், போராட்டத்தில் பங்கேற்ற 760 ஊழியர்களுக்கு, ஏன் அவர்கள் மீது பணிநீக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நவம்பர் 3, 2026: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், 241 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், 1,700-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டாஸ்மாக்கில் காலி பாட்டிலுக்கு ரூ.10 கொடுக்கும் திட்டம்
தமிழகத்தில் மொத்தம் 4,051-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டு, காலி பாட்டில்களைத் திரும்ப ஒப்படைக்கும்போது அந்தத் தொகையை மீண்டும் வழங்கும் திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தியது.
மேலும் படிக்க: ரூ.400 கோடி தனியார் பள்ளி மோசடி வழக்கு.. அன்பில் மகேஷிடம் விடிய விடிய விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீசார்!
ஆனால், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக ஊழியர்கள் குற்றம்சாட்டி வந்தனர். குறிப்பாக, கடைகளில் போதிய இடவசதி இல்லாதது, அதிக விற்பனை நடைபெறும் கடைகளில் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவது, காலி பாட்டில்களைச் சரிபார்க்க ஸ்கேனர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாதது போன்ற பிரச்சினைகளை முன்வைத்தனர்.
மேலும், காலி பாட்டில்களைச் சேகரிக்கும் பணியைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும், தானியங்கி பாட்டில் சேகரிப்பு இயந்திரங்களை நிறுவ வேண்டும், கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டம்!
ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, கடந்த இரண்டு நாட்களாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஊழியர்கள் கடைகளை மூடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக் குழுவினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: 23 நாட்களாகியும் கிடைக்காத செஞ்சி சிறுமி! காட்டுப்பகுதியில் சிபிசிஐடி தீவிர விசாரணை..
முதல் நாளில் கடைகள் மூடப்பட்டதால் சுமார் ரூ.150 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன. இரண்டாவது நாளிலும் பல்வேறு பகுதிகளில் கடைகள் திறக்கப்படாமல் இருந்தன. ஒரு சில கடைகள் பிற்பகல் மற்றும் மாலை நேரத்தில்தான் திறக்கப்பட்டன. இதனால் மதுபானம் வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
241 பேர் சஸ்பெண்ட்.. 1,700 பேருக்கு நோட்டீஸ்!
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 241 டாஸ்மாக் ஊழியர்களைப் பணியிடை நீக்கம் செய்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், போராட்டத்தில் பங்கேற்ற 760 ஊழியர்களுக்கு, ஏன் அவர்கள் மீது பணிநீக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதேபோல், கடைகளைத் திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக 1,729 மேற்பார்வையாளர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உரிய விளக்கம் அளிக்காதவர்கள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வினோத் எச்சரித்திருந்த நிலையில், தற்போது டாஸ்மாக் நிர்வாகம் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.