AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

23 நாட்களாகியும் கிடைக்காத செஞ்சி சிறுமி! காட்டுப்பகுதியில் சிபிசிஐடி தீவிர விசாரணை..

Gingee Child Missing Case: சிறுமி காணாமல் போய் 23 நாட்களைக் கடந்துள்ள நிலையிலும், இதுவரை முக்கியமான தடயம் கிடைக்காதது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சிறுமியை விரைவில் மீட்போம் என சிபிசிஐடி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

23 நாட்களாகியும் கிடைக்காத செஞ்சி சிறுமி! காட்டுப்பகுதியில் சிபிசிஐடி தீவிர விசாரணை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 03 Nov 2026 09:26 AM IST

நவம்பர் 3, 2026: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி ஹேமலதா காணாமல் போய் 23 நாட்களாகியும் இதுவரை எந்தத் துப்பும் கிடைக்காததால் சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராஜதுரையை அழைத்துச் சென்று அருகிலுள்ள காட்டுப்பகுதிகளில் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஹேமலதா, தனது பெற்றோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். இதையடுத்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 10 நாட்களாகியும் சிறுமி குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி அதிகாரிகள் சிறுமியின் தாய், தந்தை, பாட்டி, மூத்த சகோதரி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டிலும், ஆலம்பூண்டி ஊராட்சி தொடக்கப் பள்ளியிலும், அருகிலுள்ள மலைப்பகுதிகளிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சிறுமியின் மூத்த சகோதரிக்கு திருமணம் செய்யப் பார்த்த மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சரித்திரப் பதிவேடு குற்றவாளியிடம் விசாரணை!

இதற்கிடையே, சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராஜதுரை, உள்ளூர் குற்றவாளிகள் மற்றும் வடமாநிலத் தொழிலாளர்களிடமும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, ராஜதுரையை அழைத்துச் சென்று சிறுமி காணாமல் போன வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருந்ததா, சிறுமி வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு என்னென்ன வழிகள் உள்ளன, அருகிலுள்ள மலைப்பகுதிகளில் ஏதேனும் தடயங்கள் கிடைக்குமா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல், அருகிலுள்ள செங்கல் சூளையில் பணியாற்றும் தொழிலாளர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க: சிறைச்சாலைகளில் தொடரும் பாதுகாப்பு குறைபாடுகள்.. முன்னாள் டிஜிபி திரிபாதி தலைமையில் உயர்நிலைக் குழு.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

தீபாவளிக்கு மகள் வந்துவிடுவாள்.. புத்தாடையுடன் காத்திருக்கும் தாய்!

ஒருபுறம் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், சிறுமியின் தாய் தீபாவளிக்குள் தனது மகள் திரும்பி வந்துவிடுவாள் என்ற நம்பிக்கையில் அவருக்குப் புத்தாடை வாங்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, சிறுமியின் தாயே குழந்தையை யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு உண்மையை மறைக்கிறாரா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுதொடர்பாக எந்தவொரு உறுதியான ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் படிக்க: தமிழக அரசின் தீபாவளி கிஃப்ட்.. கூட்டுறவு- போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?

சிறுமி உயிருடன் இருப்பதாக விசாரணைக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், சிறுமியின் தற்போதைய நிலை குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை.

சிறுமி காணாமல் போய் 23 நாட்களைக் கடந்துள்ள நிலையிலும், இதுவரை முக்கியமான தடயம் கிடைக்காதது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சிறுமியை விரைவில் மீட்போம் என சிபிசிஐடி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Follow Us