உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் வெளுக்கும் கனமழை.. வானிலை மையம் அலர்ட்!
Tamil Nadu Weather Alert : தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும்.

மழை
சென்னை, மே 18 : தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை வெளுக்கும் என்றும் வானிலை மையம் (Tamil nadu weather update) தெரிவித்துள்ளது. மேலும், 2025 மே 22ஆம் தேதி வாக்கில் அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு (Low pressure in Arabian sea) பகுதி உருவாகக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2025 மார்ச் மாதத்தில் இருந்தே கோடை வெயில் கொளுத்தி எடுத்தது. மே மாத முதல் வாரம் வரையுமே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால், மக்கள் வெளியே செல்லவே சிரமப்பட்டனர். பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலையும் 100 டிகிரியை கடந்தது. இதற்கிடையில், அவ்வப்போது டெல்டா, கொங்கு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும், சென்னையிலும் வெயிலின் தாக்கம் குறைந்து இரு நாட்களாகவே மேகமூட்டமாக இருக்கிறது.
உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி
மேலும், ஒருசில பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். அதன்படி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 2015 மே 18ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், 2025 மே 18ஆம் தேதியான இன்று கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 2025 மே 19ஆம் தேதியான நாளை ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
2025 மே 20ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. 2025 மே 23ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெளுக்கும் கனமழை
அதைத் தொடர்ந்து, சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 மே 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் என கூறப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 2025 மே 20ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.