சிபிஎஸ் vs டேப்ஸ் ஓய்வூதியம்.. இரண்டிற்கும் என்ன வேறுபாடு? எதில் பலன் அதிகம்..
CPS vs Taps pension scheme: டேப்ஸ் ஓய்வூதியம் அரசால் உறுதி செய்யப்படுகிறது, ஊழியர்களும் பங்களிப்பு செலுத்த வேண்டும். இதில், அகவிலைப்படி அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியமும் உண்டு. ஓய்வூதியர் இறந்தால், அவர் பெற்ற ஓய்வூதியத்தின் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

Cps Vs Taps Pension Scheme
சென்னை, ஜனவரி 04: கடந்த 2003ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளனர். அதன் பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு சிபிஎஸ் (CPS) என்ற புதிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தமிழக அரசு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் என்ற டேப்ஸ் (TAPS) எனும் புதிய வகை ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பால் ஜனவரி 6 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த போராட்டத்தை கைவிடுவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது. அதோடு, அரசு ஊழியர்கள் அனைவரும் இந்த அறிவிப்பிற்கு பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதேசமயம், சமூக வலைதளத்தில் சிலர் இத்திட்டம் குறித்து எதிர்மறையாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இக்கட்டுரையில், பழைய சிபிஎஸ் ஓய்வூதியம் குறித்தும், புதிய டேப்ஸ் ஓய்வூதியம் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிக்க: “திமுக செய்யும் தவறுகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்”.. மாவட்ட செயலாளர்களுக்கு இபிஎஸ் அறிவுரை!
சிபிஎஸ் (CPS) ஓய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு பணியில் சேர்ந்த அனைவரும் சிபிஎஸ்க்கு உட்படுத்தப்பட்டனர். இந்த சிபிஎஸ் என்ற புதிய ஓய்வூதியம் என்பது, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஆகும். ஊழியர்கள் 10%, அரசு 18% மாதந்தோறும் பங்களித்து சேமிக்கும் ஓய்வூதிய திட்டமாகும்.
இவ்வாறு சிபிஎஸ்-ல் ஊழியரிடமிருந்து பிடிக்கப்படும் தொகை மற்றும் அரசு பங்களிப்பு சேர்த்து தனிப்பட்ட ஓய்வூதிய கணக்கில் முதலீடு செய்யப்படுகிறது. அரசு நிர்ணயித்த நிதி நிறுவனங்களில் விதிமுறைகளின்படி முதலீடு செய்யப்படும் இந்த பணத்தில் கிடைக்கும் வட்டி மற்றும் முதலீட்டு வருமானம் அதே கணக்கில் சேர்க்கப்படும்.
சிபிஎஸ் உறுதியில்லாத ஓய்வூதிய திட்டம்:
சிபிஎஸ் ஓய்வூதிய கணக்கில் உள்ள பணத்தில் 60% ஓய்வு பெறும் போது ரொக்கமாக வழங்கப்படும். மீதமுள்ள 40% பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் லாபத்தின் மூலம் ஓய்வூதியம் வழங்கப்படும். இது உறுதியான மாத ஓய்வூதியமாக இருக்காது. அதேபோல், சிபிஎஸ்-ல் அகவிலைப்படி அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படாது.
டேப்ஸ் (TAPS) ஓய்வூதிய திட்டத்தில் என்னென்ன பலன்கள்:
தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள டேப்ஸ் (TAPS) ஓய்வூதிய திட்டம் என்பது உறுதி ஓய்வூதிய திட்டம். இதில் ஓய்வூதியம் அரசால் உறுதி செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் ஊழியர்கள் பங்களிப்பு செலுத்த வேண்டும். அதேசமயம், அகவிலைப்படியும் கணக்கில் சேரும். குறிப்பாக இதில் ஒரு ஊழியர் கடைசியாக பெற்ற சம்பளத்தின் (அடிப்படை சம்பளம் + அகவிலைப்படி) 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.
மேலும் படிக்க: “ஆசிரியர்களை கைவிடமாட்டோம்”.. போராட்டம் நியாமானது.. அமைச்சர் அன்பில் மகேஷ்!!
டேப்ஸ்-ல் அகவிலைப்படி அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல 6 மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படும். அதேபோல், டேப்ஸ்-ல் குடும்ப ஓய்வூதியமும் உண்டு. ஓய்வூதியர் இறந்தால், அவர் பெற்ற ஓய்வூதியத்தின் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
அதோடு, இத்திட்டத்தில் 50% உறுதி ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படி சேர்க்கப்படுகிறது. குறிப்பாக, சந்தை அபாயமும் இல்லை. எனவே, டேப்ஸ் ஓய்வூதியம் ஊழியர்களுக்கு அதிக பாதுகாப்பானதும் சிறந்ததுமான திட்டமாகும்.