Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எப்போதும் விழிப்புடன் இருக்கக்கூடிய நகரம் மதுரை.. முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..

CM MK Stalin Speech: ஒன்றிய அரசுடன் இணைந்து, விருதுநகர் மாவட்டத்தில், ஆயிரத்து 894 கோடி ரூபாய் முதலீட்டில், ஆயிரத்து 52 ஏக்கர் பரப்பளவில், PM மித்ரா ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காவை உருவாக்கி வருகிறது என மதுரையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எப்போதும் விழிப்புடன் இருக்கக்கூடிய நகரம் மதுரை.. முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 07 Dec 2025 15:20 PM IST

மதுரை, டிசம்பர் 7, 2025: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவும் டிசம்பர் 6, 2025 அன்று சென்னையில் இருந்து தனியார் விமானம் மூலம் மதுரைக்கு சென்றடைந்தார். இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் வசதி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மதுரையில் ‘தமிழ்நாடு வளர்கிறது’ முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. அதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 37 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை கொண்டு, 56,766 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

91 புரிந்துணர்வு ஒப்பந்தம்:

அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு தான் என்ற நிலையை உருவாக்கினோம். அதனை உறுதிப்படுத்துகின்ற வகையில், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில், TN Rising என்ற மாநாடுகளை தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறோம். அதன்படி தூத்துக்குடி, ஒசூர், கோவை, நகரங்களில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினோம்.

அதன் தொடர்ச்சியாகதான், இன்று மதுரையில் இந்த முதலீட்டாளர் மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம்! இந்த மாநாட்டில், 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 36 ஆயிரத்து 660 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு, 56 ஆயிரத்து 766 பேருக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில், உங்கள் ஒவ்வொருவருடைய பங்கும் மிக அவசியம்! ‘மாநிலம் முழுவதும் சீரான வளர்ச்சி மாவட்டங்கள் தோறும் பரவலான வளர்ச்சி’ என்று சொன்னதை எங்களுடைய செயல்கள் மூலமாக நிரூபித்துக் காட்டியிருக்கிறோம்!

11,83,000 கோடி ரூபாய் முதலீடுகள்:

ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 11 இலட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடுகளை கொண்டு வந்திருக்கிறோம். 34 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்திருக்கிறோம். இதற்காக ஒப்பந்தங்களிட்டதோடு நம்முடைய வேலை முடிந்துவிட்டது என்று நினைக்கின்றவன் இல்லை நான்! அனைத்துத் துறைகளையும் தொடர்ச்சியாக ஆய்வு செய்வதை வழக்கமாக நான் வைத்திருக்கிறேன்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில், 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட திட்டங்கள், நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவு ‘அவுட்புட்’ காண்பித்தது இல்லை. நானும் சரி; இங்கே அமைச்சராக இருக்கின்ற திரு. டி.ஆர்.பி.ராஜா அவர்களும் சரி; ஒப்பந்தங்கள் எல்லாம் செயல்பாட்டிற்கு வரவேண்டும் என்பதில், கண்ணுங்கருத்துமாக இருப்போம்.

மதுரைக்கான வளரச்சி திட்டம்:

மதுரைக்கு மற்றொரு பெயர் இருக்கிறது… அது என்ன என்று தெரியுமா? தூங்கா நகரம். ஆனால், அதை அப்படிச் சொல்வதைவிட எப்போதும் விழிப்புடன் இருக்கக்கூடிய நகரம் என்று தான் சொல்ல வேண்டும். வைகை நதி பாயும் மண்; மீனாட்சியம்மன் கோயிலின் கலை அழகுக்கு நிகரானது எதுவுமில்லை; இங்கே, மல்லிகை மணக்கும்; நள்ளிரவிலும் இட்லியில் ஆவி பறக்கும்! சுங்குடி சேலைகள், கைவினைப் பொருட்கள் எல்லோரையும் ஈர்க்கும். மதுரையை ஒட்டி வைகை ஆற்றங்கரையில் அமைந்த கீழடியில், தமிழர்களின் நாகரிகம் எந்தளவுக்கு தொன்மையானது என்று உலகத்துக்கு எடுத்துக்காட்டக்கூடிய வகையில் சான்றுகள் எல்லாம் நமக்கு கிடைத்திருக்கிறது. இந்தியாவின் வரலாற்றையே அந்தச் சான்றுகள் மாற்றி எழுத வைத்திருக்கிறது.

ஒன்றிய அரசுடன் இணைந்து, விருதுநகர் மாவட்டத்தில், ஆயிரத்து 894 கோடி ரூபாய் முதலீட்டில், ஆயிரத்து 52 ஏக்கர் பரப்பளவில், PM மித்ரா ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காவை உருவாக்கி வருகிறது.

இந்த பூங்கா முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது, கிட்டத்தட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் இந்தப் பூங்காவில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த முன்னெடுப்பு மாநிலத்தின் ஜவுளி உற்பத்தித் துறையை, அதிநவீன மயமாக்கி, மேம்படுத்தும்!

இன்று உறுதியாகியுள்ள முதலீடுகள் கப்பல் கட்டுமானம், தோல் அல்லாத காலணி, மின்னணுவியல், உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மிக மிக முக்கியமாக, மதுரை மேலூரில் 278.26 ஏக்கர் பரப்பளவில், பிரம்மாண்டமான சிப்காட் தொழிற்பூங்காவுக்கு இன்றைக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன்.

மகளிர் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் எண்ணற்ற முன்னெடுப்புகளை நம்முடைய அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டிலேயே அதிக அளவிலான பெண்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்ற மாநிலமாக தமிழ்நாடு யாரும் எட்ட முடி உயரத்தில் இருக்கிறது. அதற்கு வலுசேர்ப்பது போல, தைவான் நாட்டைச் சேர்ந்த ‘Pei Hai’ குழுமம், தோல் அல்லாத காலணிகள் உற்பத்தித் திட்டத்தை மதுரையில் நிறுவ முன் வந்திருக்கிறது. இதன்மூலம் 15 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெண்களுக்கு! கிடைக்கப் போகிறது அதிலும் பெரும்பாலனவை

சிறிய அளவிலான ‘Chip’-ல இருந்து பெரிய அளவிலான ‘Ship’ வரை அனைத்துத் துறைகளிலும், தமிழ்நாடு, தன்னம்பிக்கையோடு, தன்னிறைவு பெற்று, தலைநிமிர்ந்து நிற்கின்ற காலமாக, திராவிட மாடல் ஆட்சிக்காலம் அமைந்திருக்கிறது” என பேசியுள்ளார்.