Diwali 2025: தீபாவளி கொண்டாட்டம்.. மக்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடுவதற்கு தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்கவும், குழந்தைகள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திறந்தவெளியில் பட்டாசு வெடிப்பது, நீர் மற்றும் கம்பளி தயார் நிலையில் வைத்திருப்பது போன்ற பாதுகாப்பு வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, அக்டோபர் 19: நாடு முழுவதும் நாளை (அக்டோபர் 20) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இப்பண்டிகையை மிகவும் பாதுகாப்பாக கொண்டாடும் பொருட்டு தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் அனைத்து வித மக்களாலும் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகையாகும். புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்படும் இந்நாளை கொண்டாட அனைவரும் தயாராகி வருகின்றனர். உச்சநீதிமன்ற உத்தரவுபடி, காலையில் 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பாக பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பொதுமக்களுக்கு சில அறிவிப்புகள்
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்கும் போது குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம் என்பதை உணர வேண்டும். மேலும் திறந்தவெளியில்தான் பட்டாசு வெடிக்க வேண்டும். சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் இந்நாளில் தேவையில்லாத நேரத்தில் பொதுவெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தீபாவளி கொண்டாட வேண்டாம்…. தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவுறுத்தல்
மேலும் பட்டாசு வெடிக்கும் போது அருகில் வாளிகளில் தண்ணீர் மற்றும் கம்பளி போர்வையை தயாராக வைத்திருக்க வேண்டும். வெடித்த பட்டாசுகளை வாளி தண்ணீரில் போட்டு அப்புறப்படுத்த வேண்டும். செருப்பு, ஷூ போன்ற காலணிகளை அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடித்த பின்னர் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும்.
மேலும் எரியும் மெழுகுவர்த்தி மற்றும் விளக்குகளை பயன்படுத்தி பட்டாசுகளை வெடிக்க கூடாது. அதனை பட்டாசு பெட்டிகளுக்கு அருகிலும் வைக்கக்கூடாது. மின் கம்பங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். அதுமட்டுமல்லாமல் சக மனிதர்கள், சாலையில் சுற்றுத்திரியும் உயிரினங்கள் ஆகியவற்றிற்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் பட்டாசு வெடிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தீபாவளிக்கு தனி வாகனத்தில் ஊருக்கு போறீங்களா? காவல்துறை முக்கிய அறிவிப்பு
மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்கள் ஆகியவற்றில் பட்டாசுகள் வெடிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீ பற்றிய கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிக்க வேண்டாம். மேலும் எப்படி பட்டாசு வெடிக்க வேண்டும் என கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலில் படி மட்டுமே அதனை செயல்படுத்த வேண்டும். சாகச செயல்களில் ஈடுபட்டு விபரீத விளைவுகளுக்கு காரணமாக வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
தீபாவளி நாளில் தீக்காயம் உள்ளிட்ட தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மேம்படுத்தப்பட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். தீக்காய சிகிச்சை அளிப்பதற்கான அத்தியாவசியம் மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பெரிய காயங்கள் ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை அளித்து மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்.
போதிய அளவில் ரத்தம் கையிருப்பில் வைத்து இருக்க வேண்டும். மாநில அவசரகால செயல்பாட்டு மையம் 9444340496, 8754448477 ஆகியவற்றிற்கு தகவல் அளிக்கலாம். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.