அரசு ஊழியர்களுக்கு செக்.. சொத்து விவரங்களை தாக்கல் செய்தால் மட்டுமே பதவி உயர்வு – தமிழக அரசு அதிரடி..
தமிழக அரசு ஊழியர்கள், தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பின் இணையதளத்தில் தங்களது சொத்து விவரங்களை முழுமையாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அசையும் மற்றும் அசையா சொத்துகள், சேமிப்பு, கடன் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இதில் பதிவு செய்ய வேண்டும்.
அக்டோபர் 8, 2026: தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களின் முழுமையான சொத்து விவரங்களை வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யும் ஊழியர்களின் பெயர்கள் மட்டுமே பதவி உயர்வுக்கான பட்டியலில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அரசு ஊழியர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
இணையதளத்தில் சொத்து விவரங்கள் பதிவு:
தமிழக அரசு ஊழியர்கள், தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பின் இணையதளத்தில் தங்களது சொத்து விவரங்களை முழுமையாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அசையும் மற்றும் அசையா சொத்துகள், சேமிப்பு, கடன் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இதில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் படிக்க: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் விதிமுறைகள் தளர்வு – வெளிமாநிலத்தில் வசிக்கும் தமிழ்நாட்டு பெண்களின் குழந்தைகளுக்கும் பயன்..
வீடுகள், நிலங்கள், நகைகள், வாகனங்கள், கையிருப்பு ரொக்கம் உள்ளிட்ட சொத்து விவரங்களையும் ஊழியர்கள் தெரிவிக்க வேண்டும். மேலும், வேறு நபர்களின் பெயரில் அரசு ஊழியர்களுக்கு சொத்துகள் இருந்தால், அந்த சொத்துகள் குறித்த விவரங்களையும், சம்பந்தப்பட்ட நபருக்கும் அரசு ஊழியருக்கும் உள்ள உறவு குறித்த தகவலையும் குறிப்பிட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறினால் பதவி உயர்வு கிடையாது:
அக்டோபர் 31-ம் தேதிக்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத அரசு ஊழியர்களின் பெயர்கள் பதவி உயர்வுக்கான பட்டியலில் இடம்பெறாது எனவும் அரசு தெரிவித்துள்ளது. மேலும், சொத்து விவரங்களை தாக்கல் செய்யாதது அரசு ஊழியர்களுக்கான நன்னடத்தை விதிகளை மீறியதாகக் கருதப்படும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இன்று 2 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை.. 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ரிப்போர்ட்..
ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதி என்ன?
கடந்த 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசு ஊழியர்கள் பணியில் சேர்ந்த மூன்று மாதங்களுக்குள் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதன்பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அவற்றை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அரசு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.