முதல்வர் ஸ்டாலினை திடீரென பாராட்டிய ஆளுநர் ரவி.. ஏன் தெரியுமா?
Governor RN Ravi On CM MK Stalin : இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் 2025 மே 10ஆம் தேதியான மாலை மாபெரும் பேரணி நடத்தினார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த பேரணியில், மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். இதற்கு முதல்வர் ஸ்டாலினை, ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டி இருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி
சென்னை, மே 11 : இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக பேரணி நடத்திய முதல்வர் ஸ்டாலினை (MK Stalin), ஆளுநர் ஆர்.என்.ரவி (Tamil Nadu Governor RN Ravi) பாராட்டி இருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையை எடுத்தது. பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டது அடுத்து, இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மூன்று நாட்களாக போர் பதற்றம் நிலவி வந்தது. இந்த மூன்று நாட்களில் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்தது. இந்த மோதல் 2025 மே 10ஆம் தேதியான நேற்று முடிவுக்கு வந்தது.
முதல்வர் ஸ்டாலினை திடீரென பாராட்டிய ஆளுநர் ரவி
இதற்கிடையில், இந்தியா ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 2025 மே 10ஆம் தேதியான நேற்று மாலை பேரணி நடத்தப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த பேரணியில் 15,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தெரிகிறது.
மாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து போர் நினைவுச் சின்னம் வரை பேரணி நடந்தது. இந்த பேரணியில் தேசியக் கொடி எந்தியபடி, அனைவரும் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் முதல்வர் ஸ்டாலினுடன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்ஏல்ஏக்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், மாணவ, மாணவிகள், காவல்துறையினர் என பலரும் கலந்து கொண்டனர்.
ராணுவத்திற்கு ஆதரவாக களமிறங்கிய முதல்வர் ஸ்டாலினை, ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டினார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, ”பாகிஸ்தானிய ராணுவ ஆக்கிரமிப்பு செயல்களுக்கு எதிராக நாட்டை துணிச்சலுடனும் வெற்றிகரமாகவும் பாதுகாக்கும் இந்திய ஆயுதப் படைகளுடன் நமது 8 கோடி தமிழ்நாட்டு மக்களின் தெளிவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இன்று மாலையில் பிரம்மாண்டமான மக்கள் பேரணியை நடத்துவதற்காக மாண்புமிகு முதலமைச்சர் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
ஏன் தெரியுமா?
“Heartiest thanks to Hon’ble Chief Minister Thiru @mkstalin for a grand public rally this evening expressing unequivocal solidarity of our 8 crore people of Tamil Nadu with the Indian Armed Forces who are valiantly and successfully defending the nation against the Pakistani…
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) May 10, 2025
நமது ஆயுதப் படைகளுடன் நமது தேசம் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் துணைநிற்பது, பயங்கரவாதத்தின் அனைத்து முனைகளையும் அழித்தொழித்து நமது தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கிடையில், இந்திய பாகிஸ்தான் இடையே மோதல் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த விஷயத்தில் அமெரிக்க தலையீட்டு பேச்சுவார்த்தைக்கு உதவியது. இதனை அடுத்து, இருநாடுகளுக்கு ஒப்பந்தத்தின்படி, மோதலை முடிவுக்கு கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.