அக்டோபர் 24 முதல் 26 வரை சிறப்பு பேருந்துகள் – எங்கிருந்து எங்கே? தமிழக அரசு அறிவிப்பு
Special Bus : வளர்பிறை முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாளில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவுத்துள்ளது. எந்தெந்த தேதிகளில் எங்கிருந்து பேருந்துகள் கிளம்புகின்றன என இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சென்னை, அக்டோபர் 23 : வளர்பிறை முகூர்த்தம் வார இறுதி நாட்களை முன்னிட்டு, பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க, தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை (Special Bus) அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 24, 2025 முதல் அக்டோபர் 26, 2025 ஆகிய 3 நாட்கள் மாநிலம் முழுவதிலும் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் இந்த பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வார இறுதியில் அதிகமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, சென்னை, கோயம்பேடு, மாதவரம் மற்றும் கிளாம்பாக்கம் (Kilambakkam) உள்ளிட்ட இடங்களில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து இயக்கப்படும் இடங்கள் மற்றும் தேதிகள்
- சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு அக்டோபர் 24, 2025 வெள்ளிக்கிழமை மற்றும் அக்டோபர் 25, 2025 சனிக்கிழமை ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதற்காக வெள்ளிக்கிழமை 365 பேருந்துகளும், சனிக்கிழமை 445 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு அக்டோபர் 24, 2025 அன்று வெள்ளிக்கிழமை மற்றும் அக்டோபர் 25, 2025 சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவிருக்கின்றன.
- மேலும் திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூரில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவிருக்கின்றன.
- மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து 40 சிறப்பு பேருந்துகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படவுள்ளன.
இதையும் படிக்க : ரயில் பணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 4வது வழித்தடம்.. ரூ. 757 கோடி மதிப்பில் திட்ட ஒப்புதல்..
அதேபோல அக்டோபர் 26, 2025 அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள மக்கள், மீண்டும் சென்னை மற்றும் பெங்களூரு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




இந்த நிலையில் இந்த பேருந்துகளில் அக்டோபர் 24, 2025 வெள்ளிக்கிழமை 9,164 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். அதே போல அக்டோபர் 25, 2025 அன்று சனிக்கிழமை 8,575 பயணிகளும், அக்டோபர் 26, 2025 ஞாயிற்றுக்கிழமை 16, 108 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க : மழை காலத்தில் தொடரும் மின் விபத்துகள் – தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? மின்சார வாரியம் அறிவிப்பு
ஆன்லைனில் எப்படி முன்பதிவு செய்வது?
வார இறுதி நாட்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவிருக்கும் மக்கள் பேருந்துகளில் செல்ல ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்ய www.tnstc.in இணையதளம் வாயிலாகவும் TNSTC மொபைல் ஆப் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். இதற்காக பேருந்து நிலையங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.