சென்னை, மே 14, 2026: தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்றதையடுத்து அரசு நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருவதுடன், பல்வேறு துறைகளின் செயலாளர்களும் மாற்றப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த சட்ட நிபுணரான விஜய் நாராயணனை தமிழக ஆளுநர் நியமித்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய் குமார் வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க: “ஆட்சி மாறினாலும் மாறாத காட்சி”.. டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூல் தொடர்வதாக மதுப்பிரியர்கள் குமுறல்!!
புதிய தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயணன் நியமனம்:
வழக்கறிஞர் விஜய் நாராயணன், அதிமுக ஆட்சிக் காலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக ஏற்கனவே பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு தலைமை வழக்கறிஞராக இருந்த பி.எஸ். ராமன் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய அட்வகேட் ஜெனரலாக விஜய் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க: “இளைஞர்களே இலக்கு”.. சென்னையில் இருந்து கஞ்சா கடத்திய கல்லூரி மாணவி.. பிடிபட்டது எப்படி?
மேலும், இவர் முன்னாள் இந்திய அட்டார்னி ஜெனரலான கே.கே. வேணுகோபால் அவர்களின் மருமகன் என்பதும் கவனிக்கத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது. சட்ட நுணுக்கங்களில் தேர்ச்சி பெற்ற மூத்த வழக்கறிஞரான விஜய் நாராயணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி வாதாடிய அனுபவம் கொண்டவர்.
யார் இந்த விஜய் நாராயணன்?
குறிப்பாக, முதலமைச்சர் விஜய் தொடர்புடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார் இறக்குமதி வழக்கில் அவரது தரப்பில் ஆஜராகி வாதாடியிருந்தார். அந்த வழக்கு மாநில அளவில் பெரும் கவனம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பதவி என்பது மாநில அரசின் மிக முக்கியமான சட்டப் பொறுப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அரசின் முக்கிய கொள்கைகள், சட்ட ஆலோசனைகள் மற்றும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் அரசின் தரப்பை முன்னிலைப்படுத்துவது போன்ற பொறுப்புகளை தலைமை வழக்கறிஞர் மேற்கொள்வார்.
இதனால், விஜய் நாராயணன் நியமனம் தமிழக அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.