Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tirunelveli Honour Killing: கவின் குடும்பத்தை நேரில் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்.. உதவி செய்த திருமாவளவன்..!

VCK Thirumavalavan: திருநெல்வேலியில் ஆணவக் கொலையில் பலியான கவின் செல்வகணேஷின் குடும்பத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறினார். விசிக தலைவர் திருமாவளவனும் சந்திப்பில் கலந்து கொண்டார். கவின் குடும்பத்தின் பாதுகாப்பு, குற்றவாளிகளின் கைது மற்றும் அரசு வேலை வாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முதலமைச்சர் கேட்டறிந்தார்.

Tirunelveli Honour Killing: கவின் குடும்பத்தை நேரில் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்.. உதவி செய்த திருமாவளவன்..!
கவின் குடும்பத்தாருடன் திருமாவளவன்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Aug 2025 15:42 PM

திருநெல்வேலியில் ஆணவப்படுகொலை (Honour Killing) செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் குடும்பத்தாரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த சந்திப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் (VCK Thirumavalavan) பங்கேற்றார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கவின், கடந்த 2025 ஜூலை 27ம் தேதி திருநெல்வேலியில் உள்ள கேடிசி நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கவின் காதலித்து வந்த சுபாஷினி என்ற பெண்ணின் தம்பி சுர்ஜித் இந்த கொலையை செய்தார் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதுகுறித்து இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 25ம் தேதி விசிக தலைவர் திருமாவளன் செய்தியாளர்களை சந்தித்தார்.

திருமாவளவன் பேட்டி:


அப்போது ஆணவக்கொலை குறித்து பேசிய திருமாவளவன், “ கவினின் தந்தை சந்திரசேகர் இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 25ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தமது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை வழங்கிட வேண்டும், மகன் கவினின் கொலைக்கு தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்திட வேண்டும், அந்த கொலையில் கூலிப்படைக்கும் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. எனவே, யாரும் தப்பிக்கக்கூடாது என்ற வகையிலே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். அத்துடன் தன்னுடைய இளைய மகனுக்கு அரசு வேலை வாய்ப்பு வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

ALSO READ: மதிக்காத மனைவி,மகன்.. பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவன்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனிவுடன் அனைத்து கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று நம்புகிறோம். இந்த 3 கோரிக்கைகள்தான் கவின் குடும்பத்தின் சார்பில் வைக்கப்பட்டது. ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்பதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுதியாக உள்ளது. இதுதொடர்பாக வலியுறுத்தியும் வருகிறோம். மாநில அரசுக்கும் அந்த அதிகாரம் இருக்கிறது என்பதை பலமுறை சுட்டி காட்டியுள்ளோம், இதற்கான ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

தனிச்சட்டம்:

முன்னதாக, கடந்த 2025 ஆகஸ்ட் 6ம் தேதி தமிழ்நாட்டில் நடைபெறும் ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, விசிக, சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது பேசிய விசிக தலைவர் திருமாவளவன், ”இந்திய சட்ட ஆணையம் பரிந்துரைத்தபடி சட்டம் இயற்றப்பட வேண்டும், இதுபோன்ற குற்றங்களைக் கண்காணித்துத் தடுக்க ஒரு சிறப்பு புலனாய்வுப் பிரிவை அமைக்க வேண்டும், ஆணவக் கொலை சம்பவங்களில் ஈடுபடும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

ALSO READ: பார்க்கிங் பிரச்னை.. முதியவர் கொலை.. கடலூரில் ஷாக் சம்பவம்!

தொடர்ந்து பேசிய சிபிஐ மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன், “ஆணவக் கொலைகள் சமூக சமத்துவத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கிறது. இதற்கான அவசர சட்ட நடவடிக்கைகள் தேவை. தற்போதுள்ள சட்ட விதிகள் சாதி அடிப்படையிலான கொலைகளைத் தடுக்கத் தவறிவிட்டன. எனவே, தனிச் சட்டம் இயற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்