குறுகிய அரசியல் நோக்கத்தோடு செயல்படும் மத்திய அரசு – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..
Tamil Nadu CM MK Stalin: மத்திய–மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய நிதி பங்கீட்டை மத்திய அரசு மறுக்கிறது. திமுக ஆட்சியில் இரட்டை இலக்கு வளர்ச்சியை 14 ஆண்டுகளுக்கு பின் அடைந்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

சென்னை, ஆகஸ்ட் 23, 2025: மத்திய–மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கை சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப், “நாடு முதலில்” என்று அடிக்கடி பேசுகிறார்கள், ஆனால் நான் அதற்கு சம்மதிக்கவில்லை; முதலில் அரசியலமைப்புதான், அதன் பிறகே நாடு. ஏனெனில், அரசியலமைப்பே நாடை உருவாக்கியது. குறிப்பாக இந்தியா போன்ற கூட்டாட்சி நாடு, அரசியலமைப்பின் மூலம் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. நாங்கள் அரசியலமைப்பில் கூட்டாட்சி அமைப்பாக உள்ளோம், ஆனால் உண்மையில் கூட்டாட்சியாக இயங்குகிறோமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது,* என்றார்.
தொடர்ந்து கருத்தரங்கில் பேசிய முன்னாள் நீதிபதி செலமேஸ்வர், கடந்த 75 ஆண்டுகளாக இந்தியா கூட்டாட்சி நாடு என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்தாலும், அதில் சந்தேகமுள்ளதாக தெரிவித்தார். “அமெரிக்கா 13 மாநிலங்களின் ஒப்பந்தத்தில் உருவான கூட்டாட்சி; ஆனால் இந்தியா அப்படியல்ல. இந்தியாவில் மாகாணங்கள் பிரிட்டிஷ் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்டவை. அதில் எந்தவித சுயாட்சியும் இல்லை,” என்றார்.
Also Read: ராகுல் காந்தியுடன் கைகோர்க்கும் முதல்வர் ஸ்டாலின்.. பீகாரில் ஒன்று கூடும் இந்தியா கூட்டணி தலைவர்கள்!
தமிழக அரசியல் – சமூக நீதி அரசியல்:
பின்னர் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாட்டின் அரசியல், சமூக நீதி அரசியலாக உள்ளது. தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் அனைவருக்கும் சென்றடைந்துள்ளன. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழ்நாடு பல துறைகளில் முன்னணி மாநிலமாக உள்ளது. ஆனால் மத்திய அரசு, தமிழ்நாடு அரசிற்கு உரிய நிதி பங்கை வழங்காமல், குறுகிய அரசியல் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. பல்வேறு நெருக்கடிகளை மீறி போராடி தமிழ்நாட்டை உயர்த்தி வருகிறோம்,” என்றார்.
அதேபோல், தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம், ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பாஜக தலைமையற்ற ஆட்சி நடைபெறுவதாக குறிப்பிட்ட அவர், “கூட்டாட்சிகளுக்கு எதிரான நடவடிக்கையை திராவிட முன்னேற்றக் கழகமும், எங்களுடன் இணைந்திருக்கும் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இணைந்து கண்டித்துள்ளன. சர்க்காரியா ஆணையம் குறித்த கருத்துகளுக்கேற்ப அரசியலமைப்பு சட்ட திருத்தம் மேற்கொள்ள உரிய பரிந்துரைகளை வழங்கவில்லை,” என குற்றம்சாட்டினார்.
குறுகிய அரசியல் நோக்கத்தோடு செயல்படும் மத்திய அரசு:
காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி
கலைக்கப்பட்ட பிறகு, ஆளுநர் ஆட்சிக்காலத்தில் காஷ்மீர் மாநிலத்தை ஒன்றிய அரசின் நேரடியான ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியாக மாற்றி அறிவித்தார்கள். இத்தகைய ஜனநாயக விரோத, கூட்டாட்சியியலுக்கு எதிரான நடவடிக்கைளை திராவிட முன்னேற்றக் கழகமும்,… pic.twitter.com/NoipGsYBbn— DMK IT WING (@DMKITwing) August 23, 2025
மேலும், காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு, ஆளுநர் ஆட்சிக்காலத்தில் காஷ்மீர் மாநிலத்தை ஒன்றிய அரசின் நேரடியான ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியாக மாற்றி அறிவித்தார்கள். இத்தகைய ஜனநாயக விரோத, கூட்டாட்சியியலுக்கு எதிரான நடவடிக்கைளை திராவிட முன்னேற்றக் கழகமும், எங்களோடு இணைந்திருக்கின்ற அனைத்து கட்சிகளும் இணைந்து கண்டித்தோம்.
நிதி பங்கீட்டை கொடுக்க மறுக்கும் மத்திய அரசு:
“பல தடைகளை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது. மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய நிதி பங்கீட்டை மத்திய அரசு மறுக்கிறது. திமுக ஆட்சியில் இரட்டை இலக்கு வளர்ச்சியை 14 ஆண்டுகளுக்கு பின் அடைந்துள்ளோம். இந்தி திணிப்பை அரசு முறியடித்துள்ளது. மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து திமுக அரசு போராடி வருகிறது. அனைத்து விதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகள் வலிமையாக இந்தியா உருவாக உறுதுணையாக இருக்கும்,” எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.