கோட் சூட் போட்ட விஜய்.. எம். எல்.ஏ.க்கள் பதவியேற்பு.. முதல் நாள் சட்டப்பேரவையில் நடந்தது என்ன?
இதனிடையே, உறுப்பினர்கள் அனைவரும் தாங்கள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழைத் தவறாமல் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர். எனினும், அமைச்சர் கீர்த்தனா தனது வெற்றிச் சான்றிதழை எடுத்து வர மறந்துவிட்டதாக அவையில் தெரிவித்தார். இதனால், அவர் இன்று பதவியேற்க முடியாமல் போனது.

முதல்வர் விஜய், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், 17வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று (மே 11) காலை 9.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முறைப்படி பதவியேற்றுக்கொண்டனர். நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழக முதலமைச்சர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் அமோக வெற்றி பெற்றார். சட்ட விதிகளின்படி ஒரு நபர் இரு தொகுதிகளில் உறுப்பினராக இருக்க முடியாது என்பதால், முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் அவர் தனது திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதையும் படிக்க : பணம் இல்லை என பேசாதீங்க.. திசைதிருப்பாதீங்க – முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து கேள்விகளை அடுக்கிய முக ஸ்டாலின்!
எம்எல்ஏக்கள் பதவியேற்பு:
அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதை அடுத்து, தமிழகத்தின் 234 தொகுதிகளில் ஒரு தொகுதி (திருச்சி கிழக்கு) தற்போது காலியாகிவிட்டது. அதன்படி, இன்றைய கூட்டத்தில் 233 சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் கலந்துகொண்டனர். தொடர்ந்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரும் எம்எல்ஏவாகப் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
எம்எல்ஏவாக பதவியேற்காத கீர்த்தனா:
இதனிடையே, உறுப்பினர்கள் அனைவரும் தாங்கள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழைத் தவறாமல் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர். எனினும், அமைச்சர் கீர்த்தனா தனது வெற்றிச் சான்றிதழை எடுத்து வர மறந்துவிட்டதாக அவையில் தெரிவித்தார். இதனால், அவர் இன்று பதவியேற்க முடியாமல் போனது. இதேபோல், வெற்றிச் சான்றிதழை மாற்றி எடுத்து வந்ததால், கே.சி.கருப்பணனும் இன்று உறுதிமொழி ஏற்கவில்லை.
இன்றும் கறுப்பு நிற கோட் சூட்டில் முதல்வர்:
முன்னதாக, தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தவெக தலைவர் சி.ஜோசப் விஜய் நேற்றைய தினம் பதவியேற்றபோது, அவரது அரசியல் வருகையை விடவும் அவர் அணிந்திருந்த உடை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தமிழக அரசியலில் பல தசாப்தங்களாகத் தொடரும் ‘வெள்ளை சட்டை – வேட்டி’ என்ற பாரம்பரியத்தை உடைத்து, ஒரு நவீன ‘பவர் டிரெஸ்ஸிங்’ பாணியில் அவர் காட்சியளித்தார்.
தமிழக அரசியல்வாதிகளின் அடையாளமாக விளங்கும் பாரம்பரிய வேட்டி-சட்டையைத் தவிர்த்து, மேற்கத்திய பாணியிலான சூட் அணிந்தது ஒரு நவீன மாற்றமாகப் பார்க்கப்பட்டது. அந்தவகையில், இரண்டாவதாக இன்றும் முதல்வர் விஜய் தனது கறுப்பு நிற கோட் சூட்டில் சட்டமன்றம் வருகை தந்து கவனத்தை ஈர்த்தார்.
ஜெயலலிதா படத்துடன் பதவியேற்ற செங்கோட்டையன்:
தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன் இன்று எம்எல்ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது, அவர் தனது சட்டை பையில் ஜெயலலிதா புகைப்படத்துடன் எம்எல்ஏ பதவியேற்றது பேசும் பொருளாகியுள்ளது.
நேருக்கு நேர் உதயநிதி – விஜய்:
இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மிகவும் சுவாரஸ்யமானதாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், முதல்வர் ஜோசப் விஜய்யும் நேருக்கு நேர் எதிர் எதிரே அமர்ந்தனர். ஒருவர் ஆட்சியை வழிநடத்தும் முதலமைச்சர், மற்றொருவர் ஆட்சியைக் கண்காணிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் என ஒரே வயது வரம்பைச் சேர்ந்த இரு இளைஞர்கள் சட்டமன்றத்தின் இரு முக்கியத் தூண்களாக அமர்ந்தது தமிழக அரசியலில் முக்கிய கவனம் பெற்றது.
இதையும் படிக்க: முதலமைச்சர் விஜய் vs எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி.. அனல் பறக்கும் சட்டமன்றம்.. தமிழக அரசியலில் புதிய அத்தியாயம்!!