புதுடெல்லி, ஜனவரி 23 : திருப்பரங்குன்றம் (Thiruparankundram) சுப்பிரமணிய சுவாமி கோயிலை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக, தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் (Supereme Court) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலைச் சுற்றி தற்போது மதரீதியான சர்ச்சை நிலவி வருகிறது. இந்த வழக்கின் முக்கிய அம்சமாக, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூண் விவகாரம் கடந்த சில மாதங்களாக எழுந்து வருகிறது. தற்போது மேலும் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அங்குள்ள தனிநீதிபதி தீபத் தூணில் விளக்கு ஏற்ற உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. பின்னர், இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஜனவரி 6, 2026 அன்று வழக்கை விசாரித்து, தனிநீதிபதி வழங்கிய உத்தரவை உறுதி செய்தனர்.
இதையும் படிக்க : தைப்பூசம்: மருதமலை முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு முக்கிய கட்டுப்பாடு..என்ன அது!
விசாரணை காலத்தில், தீபத் தூணின் அருகில் சிக்கந்தர் பாதுஷா தர்கா இருப்பதால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என தமிழ்நாடு அரசு வாதிட்டது. ஆனால், நீதிபதிகள் அந்த வாதத்தை நிராகரித்து, குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் மீது சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் அரசின் பயம் கற்பனையானது என கருத்து தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம் கோவிலை தொல்லியல் துறைக்கு மாற்ற வழக்கு
இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த இந்து தர்மா பரிஷத் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலை மத்திய அரசின் கீழ் செயல்படும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும், மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் 24 மணி நேரமும் எரியும் நிரந்தர விளக்கு அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு ஜனவரி 23, 2026 அன்று நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பாஞ்சோலி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முடிவடைந்துள்ளதாகவும், அந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் பதிலை பெற உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இதையும் படிக்க : நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச திருவிழா…கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது!
இதற்கிடையில், சமூக செயற்பாட்டாளர்கள் சிலர், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டால், வழிபாட்டு முறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே தீபத் தூண் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ள நிலையில், தற்போது புதிய மனுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் மேலும் கவனம் பெற்றுள்ளது.
