AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கவின் ஆணவக்கொலை வழக்கு.. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!!

Kavin honor killing case: தூத்துக்குடி மாவட்டம் ஏரலைச் சேர்ந்த கவின் ஆணவக்கொலை வழக்கில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் ஒரு கிரிமினல் வழக்கை எவ்வாறு கையாளக் கூடாதோ அவ்வாறு கையாளப்பட்டுள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கவின் ஆணவக்கொலை வழக்கு.. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!!
கவின்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 05 Nov 2026 13:44 PM IST

டெல்லி, நவம்பர் 05: தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய காதல் விவகாரம் மற்றும் ஆணவக்கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் நாள்தோறும் புதிய திருப்பங்களும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் அரங்கேறி வருகின்றன. கடந்த ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி அன்று, தூத்துக்குடி மாவட்டம் ஏரலைச் சேர்ந்த கவின் என்பவர், தனது தங்கையைக் காதலித்தார் என்ற காரணத்திற்காகச் சுர்ஜித் என்பவரால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் சுர்ஜித் கைது செய்யப்பட்டதுடன், அவரது பெற்றோரான உதவி ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி உள்ளிட்டோர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிக்க: தீபாவளிக்கு ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள்.. ‘வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு’ விற்பனை தொடக்கம்

குற்றப்பத்திரிகை ரத்து விவகாரம்:

கவின் கொலை வழக்கில் தொடர்புடைய சிலரது பெயர்களை நீக்குவது மற்றும் குற்றப்பத்திரிகையில் உள்ள சில குறிப்பிட்ட பிரிவுகளை ரத்து செய்வது தொடர்பாகத் தொடர்புடைய உயர் நீதிமன்றக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றக் கிளை, சில குற்றப்பத்திரிகை விவரங்களை ரத்து செய்து அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. உயர் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவுகள் காவல் துறை தரப்பிலும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், அதனை எதிர்த்துத் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் மனு தள்ளுபடி:

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது. விசாரணையின் முடிவில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரு கிரிமினல் வழக்கை எவ்வாறு கையாளக் கூடாதோ, அவ்வாறான முறையிலேயே இவ்வழकகுக் கையாளப்பட்டிருப்பதாகக் கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: “பி.டி.அரசகுமார் ரூ.100 கோடிக்கு மேல் பணம் வசூலித்தார்”.. நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் தரப்பு பரபரப்பு வாதம்!!

புலன் விசாரணை நடைமுறைகள்:

காவல்துறையினர் மற்றும் புலன் விசாரணை அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்த கூடுதல் விவரங்களை அலசிய உச்ச நீதிமன்றம், கிரிமினல் வழக்குகளில் பின்பற்றப்பட வேண்டிய சட்ட நெறிமுறைகள் மற்றும் நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியது. குற்றவியல் வழக்குகளின் புலன் விசாரணையில் வெளிப்படைத்தன்மையும் துல்லியமும் இருக்க வேண்டும் என்றும், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிடத் தகுந்த காரணங்கள் எதுவும் இல்லை எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்தத் தீர்ப்பு தமிழகத்தில் நடைபெற்ற ஆணவக்கொலை வழக்கு விசாரணைகளில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

Follow Us