Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sri Devi: நடிகை ஸ்ரீதேவியின் சொத்தை அபகரிக்க திட்டம்.. 3 பேர் மீது போனிகபூர் வழக்கு!

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமான சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நிலத்தை அபகரிக்க முயன்ற 3 பேர் மீது போனி கபூர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, தாம்பரம் தாசில்தார் நான்கு வாரங்களில் தெளிவான முடிவு எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

Sri Devi: நடிகை ஸ்ரீதேவியின் சொத்தை அபகரிக்க திட்டம்.. 3 பேர் மீது போனிகபூர் வழக்கு!
ஸ்ரீதேவி நிலத்தை அபகரிக்க முயற்சி
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 26 Aug 2025 07:52 AM

சென்னை, ஆகஸ்ட் 26: மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமான சொத்தை அபகரிக்க முயன்றதாக அவரது கணவர் 3 பேர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் பிறந்து இந்திய சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தயாரிப்பாளர், நடிகர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர். இப்படியான நிலையில் ஸ்ரீதேவி கடந்த 2018ம் ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இப்படியான நிலையில் அவரின் கணவர் போனி கபூர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

சொத்தை அபகரிக்க முயற்சி

அந்த மனுவில், “சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள நிலத்தை மறைந்த எனது மனைவியான ஸ்ரீதேவி கடந்த 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி வாங்கினார். சட்டப்பூர்வமாக அந்த சொத்தை ஸ்ரீதேவி வாங்கிய நிலையில், தற்போதும் எனது குடும்பத்தினர் அந்த நிலத்தை முழுமையாக உடைமையாக்கி ஒரு பண்ணை வீடாகப் பயன்படுத்தி வருகிறோம். இந்த சொத்தை நாங்கள் நிலத்துக்கு சொந்தக்காரரான எம்.சி. சம்பந்த முதலியாரிடம் இருந்து வாங்கினோம். அவருக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் இருந்தனர்.

Also Read: சொத்துக்காக தந்தையை மிரட்டிய மகள்கள்.. ரூ. 4 கோடி சொத்தை உண்டியலில் போட்ட முன்னாள் ராணுவ வீரர்!

இதனிடையே எம்.சி. சம்பந்த முதலியார் குடும்பத்தினர் 1960 ஆம் ஆண்டு சொத்தை தங்களுக்குள் பிரித்துக் கொள்ள ஒரு பரஸ்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஸ்ரீதேவி பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரம் மூலம் நிலத்தை வாங்கினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது மூன்று நபர்கள் அந்த நிலத்துக்கு உரிமை கோரத் தொடங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக விசாரித்தபோது இந்த நபர்கள் தாங்கள் எம்.சி.சம்பந்த முதலியாரின் மகன்களில் ஒருவரது இரண்டாவது மனைவி குழந்தைகள் என்றும் தெரிவித்துள்ளனர். கடந்த 2005 ஆம் ஆண்டு தாங்கள் கூறுவதை நியாயப்படுத்தும் வகையில் தாம்பரம் தாசில்தாரிடமிருந்து சட்டப்பூர்வ வாரிசுச் சான்றிதழைப் பெற்றிருக்கின்றனர்.

ஆனால் நிலத்தின் அசல் உரிமையாளர் மயிலாப்பூரில் வசித்து வருவதால், அத்தகைய வாரிசு சான்றிதழை வழங்க தாம்பரம் தாசில்தாருக்கு அதிகார வரம்பு இல்லை. மேலும், இரண்டாவது திருமணம் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகாத நிலையில் இருப்பதாகவும், உரிமை கோரும் மூன்று பேரையும் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வ வாரிசுகளாகக் கருத முடியாது எனவும் தெரிவிக்க வேண்டும் எனவும் போனி கபூர் தரப்பில் முறையிடப்பட்டது.

Also Read: பதிவு செய்தால் மட்டும் சொத்தின் உரிமையாளர் ஆக முடியாது – உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து நிபுணர் எச்சரிக்கை

நீதிபதி உத்தரவு 

போனிகபூரின் மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் நான்கு வாரங்களுக்குள் தெளிவான முடிவை எடுக்குமாறு தாம்பரம் தாசில்தாருக்கு உத்தரவிட்டுள்ளார்.