23-ஆம் தேதி நடக்கும் அதிமுக-பாஜக பிரச்சார பொதுக்கூட்டம்.. கூட்டணியில் இணையும் டிடிவி தினகரன்?
AMMK TTV Dinakaran: ஜனவரி 23ஆம் தேதி நடைபெற உள்ள பிரச்சார பொதுக்கூட்டத்திற்காக வெளியிடப்பட்டுள்ள பேனர்களில், டிடிவி தினகரனின் புகைப்படம் இடம் பெற்றுள்ளதால், அவர் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையக்கூடும் என்ற யூகங்கள் எழுந்துள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகிய பின்னரும், மீண்டும் கூட்டணியில் இணையுமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

கோப்பு புகைப்படம்
ஜனவரி 21, 2026: தமிழக சட்டசபைத் தேர்தல் வரக்கூடிய ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, ஆளும் திமுக அரசு மீண்டும் ஆட்சி தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில், எதிர்க்கட்சியான அதிமுக தரப்பு எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆளும் கட்சியான திமுக தலைமையிலான கூட்டணியில் தற்போது காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தமிழக அரசியல் களம்:
தமிழக அரசியல் சூழலில் தற்போது நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் ஆகியவை முக்கியமாக களத்தில் உள்ளன. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்தக் கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் வகையில் தேமுதிகவையும் அமமுகவையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: கோவையில் ரூ.2.5 கோடியில் மின்விசை படிக்கட்டுடன் கூடிய நடைமேம்பாலம்…என்ன வசதிகள்..எங்கு அமைகிறது!
இதற்கிடையில், நாம் தமிழர் கட்சி இந்த முறையும் தனித்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளது. அதேபோல், தமிழக வெற்றி கழகம் தரப்பில் கூட்டணிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூட்டணி கட்சிகள் வந்தாலும், முதலமைச்சர் வேட்பாளர் விஜய்தான் என அக்கட்சி தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகத்தில் நடக்கும் அதிமுக – பாஜக பிரச்சார பொதுக்கூட்டம்:
இந்தச் சூழலில், வரக்கூடிய ஜனவரி 23ஆம் தேதி மதுராந்தகத்தில் அதிமுக–பாஜக கூட்டணிக் கட்சிகளின் முதல் பிரச்சார பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த மேடையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: இன்று திமுகவில் இணைகிறார் வைத்திலிங்கம்?.. ஓபிஎஸ்-க்கு காத்திருக்கும் ஷாக்!!
இதற்கிடையில், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் இன்று தமிழகம் வருகிறார். மூன்று நாள் பயணமாக வரும் அவர், இன்றைய தினம் தேமுதிக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 23ஆம் தேதி நடைபெற உள்ள பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு முன்பாக கூட்டணி இறுதி செய்யப்பட்டால், அந்த மேடையில் அவர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியாக இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இடம்பெறும் டிடிவி தினகரன்?
இதற்கிடையில், ஜனவரி 23ஆம் தேதி நடைபெற உள்ள பிரச்சார பொதுக்கூட்டத்திற்காக வெளியிடப்பட்டுள்ள பேனர்களில், டிடிவி தினகரனின் புகைப்படம் இடம் பெற்றுள்ளதால், அவர் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையக்கூடும் என்ற யூகங்கள் எழுந்துள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகிய பின்னரும், மீண்டும் கூட்டணியில் இணையுமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதன் ஒரு பகுதியாக, முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இரண்டு முறை டிடிவி தினகரனை நேரில் சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கூட்டணி தொடர்பாக எனக்கு யாரும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. யாருடன் கூட்டணி அமைப்பது என்பதை உரியவர்கள் உரிய நேரத்தில் அறிவிப்பார்கள்” என தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.