ஒழுக்கத்தை கடைபிடியுங்கள்.. சென்னை ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை!
தெற்கு ரயில்வே, சென்னை புறநகர் மின்சார ரயில் பயணிகளுக்கு ஒழுக்கமான நடத்தைக்கு அறிவுறுத்தியுள்ளது. இருக்கைகளைத் தவறாகப் பயன்படுத்துதல், எதிர் இருக்கையில் கால்களை வைத்தல் போன்ற செயல்கள் தண்டனைக்குரியவை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் விதிகளைப் பின்பற்றி, இதர பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, செப்டம்பர் 11: சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்கும் மக்களுக்கு தெற்கு ரயில்வே எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சென்னை புறநகர் ரயில் பயணத்தில் பயணிகள் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் புறநகர் ரயில்களில் பயணிகள் செய்யும் செயலால் சக பயணிகள் அவதிக்குள்ளாவது வருத்தம் அளிக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ரயிலில் ஏறாத நபர்களுக்கு இருக்கைகளை பிடித்து வைப்பது தவறான ஒன்று எனவும், எதிர் இருக்கைகளில் கால்களை வைத்துக் கொண்டு பயணிப்பது ரயில்வே விதிகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. எனவே பயணிகள் ரயில் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே ரயிலில் இருக்கும் இருக்கைகள் அனைத்தும் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பயன்படுத்தப்பட வேண்டும். ரயில் பெட்டிகளின் வாசல்களில் அமர்வதும் வழியை மறிப்பதும், ரயில் நிற்பதற்கு முன்பே இறங்குவதும் ஏறுவதும் ஆகியவை மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். அனைத்து ரயில் பயணிகளும் பொறுப்புடன் கண்ணியத்துடனும் நலம் நடந்து தங்களுக்கும் மற்றவர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் இனிமையான பயண அனுபவத்தை பெற வழிவகை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




சென்னையில் மின்சார ரயில்கள் சேவை
சென்னையில் மின்சார ரயில்களின் சேவை என்பது மிக முக்கியமான போக்குவரத்து சாதனமாக தெரிகிறது. சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர், புதுச்சேரி, திருவண்ணாமலை, விழுப்புரம் வரை மின்சார ரயில்களில் சேவையானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆவடி, திருவள்ளூர், திருப்பதி என பல இடங்களுக்கும் சேவை இயங்கி வருகிறது.
தினந்தோறும் இந்த மின்சார ரயில்களை நம்பி இலட்சக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் இருக்கின்றனர். காலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை மின்சார ரயில் சேவையானது இயக்கப்பட்டு வருகிறது. பீக் ஹவர்ஸ் என சொல்லப்படும் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் 7 மணி வரையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு மின்சார ரயில்கள் இயங்கி வருகிறது.
Also Read: சினிமாவை மிஞ்சிய காட்சி.. சீருடையிலேயே காஞ்சிபுரம் டிஸ்பி கைது.. திடீரென தப்பியோட்டம்!
இப்படியான நிலையில் மின்சார ரயில்களில் சில நேரங்களில் நடைபெறும் விரும்பத்தகாத சம்பவங்கள் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் பயணிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எதிர் இருக்கையில் கால் வைத்து அசுத்தம் செய்வது, அநாகரிகமாக நடப்பது, அடுத்த வரும் ஸ்டேஷனில் ஏறும் பயணிக்கு முன்கூட்டியே இடம் பிடித்து வைப்பது, வாசலில் நின்று கொண்டு வழி விடாதது என்ன பல்வேறு விதமான இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் முறையிடப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.