ஆயுத பூஜை விடுமுறை: 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – முன்பதிவு எப்போது?
Special Trains for Ayudha Puja : ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, தெற்கு ரயில்வே 10 சிறப்பு ரயில் சேவைகளை அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து கோவை, செங்கோட்டை, கேரள மாநிலம் கொல்லம் ஆகிய இடங்களுக்கும், ஈரோட்டிலிருந்து திருநெல்வேலிக்கும் இந்தச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன
சென்னை, அக்டோபர் 14 : ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, தெற்கு ரயில்வே 10 சிறப்பு ரயில் சேவைகளை அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து கோவை, செங்கோட்டை, கேரள மாநிலம் கொல்லம் ஆகிய இடங்களுக்கும், ஈரோட்டிலிருந்து திருநெல்வேலிக்கும் இந்தச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து ரயில்களுக்குமான முன்பதிவு அக்டோபர் 15, 2026 நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.
ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
சென்னை சென்ட்ரல் – போத்தனூர் (06023) இடையே அக்டோபர் 16, 2026 வெள்ளிக்கிழமை இரவு 11.55 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 9.15 மணிக்குப் போத்தனூர் சென்றடையும். அதனைத் தொடர்ந்து போத்தனூர் – சென்னை சென்ட்ரல் (06024) இடையே அக்டோபர் 17, 2026 பிற்பகல் 2 மணிக்குப் புறப்பட்டு, அன்றிரவு 11.55 மணிக்குச் சென்னை வந்தடையும்.
இதையும் படிக்க : கோவை வாலாங்குளத்தில் என்ன நடக்கிறது? ஆங்காங்கே கிடக்கும் பெண்கள் உள்ளாடைகள்.. பொதுமக்கள் அதிர்ச்சி!




மீண்டும் சென்னை சென்ட்ரல் – போத்தனூர் (06033) இடையே அக்டோபர் 18, 2026 இரவு 11.55 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை போத்தனூர் சென்றடையும். மறுமார்க்கமாக போத்தனூர் – சென்னை சென்ட்ரல் (06034) அக்டோபர் 20, 2026 மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு, புதன்கிழமை அதிகாலை 3.35 மணிக்குச் சென்னை வந்தடையும்.
தாம்பரம் – செங்கோட்டை இடையே சிறப்பு ரயில்
தென் மாவட்டப் பயணிகளுக்காக தாம்பரம் – செங்கோட்டை (06089) இடையே அக்டோபர் 19, 2026 இரவு 11.55 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.15 மணிக்குச் செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கமாக செங்கோட்டை – தாம்பரம் (06090) இடையே அக்டோபர் 20, 2026 பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு, புதன்கிழமை அதிகாலை 3.20 மணிக்குத் தாம்பரம் வந்தடையும்.
ஈரோடு – திருநெல்வேலி (06145) இடையிலான சிறப்பு ரயில் அக்டோபர் 16, 2026 மாலை 4 மணிக்கு ஈரோட்டிலிருந்து புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கு நெல்லை சென்றடையும். திருநெல்வேலி – தாம்பரம் (06146) இடையிலான சிறப்பு ரயில் திரும்பும் வழியில் இந்த ரயில் தாம்பரம் வரை இயக்கப்படுகிறது. அக்டோபர் 20, 2026 இரவு 11.40 மணிக்குப் புறப்பட்டு, புதன்கிழமை காலை 10.30 மணிக்குத் தாம்பரம் சென்றடையும்.
சென்னை சென்ட்ரல் – கொல்லம் (06083) இடையே அக்டோபர் 19, 2026 இரவு 11.50 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மாலை 4.30 மணிக்குக் கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக கொல்லம் – சென்னை சென்ட்ரல் (06084) அக்டோபர் 20, 2026 மாலை 6.45 மணிக்குப் புறப்பட்டு, புதன்கிழமை காலை 11.35 மணிக்குச் சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இதையும் படிக்க : வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி மாயம்…. 3 நாட்களாக தேடும் போலீஸ் – செஞ்சி அருகே பரபரப்பு
முன்பதிவு விவரம்
மேற்கண்ட அனைத்துச் சிறப்பு ரயில்களுக்குமான பயணச்சீட்டு முன்பதிவு நாளை காலை 8 மணிக்குத் தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஐஆர்சிடிசி இணையதளம், செயலி மற்றும் ரயில் நிலைய முன்பதிவு மையங்களில் பயணிகள் முன்பதிவு செய்யலாம். பண்டிகைக் காலத்தில் இருக்கைகள் விரைவில் நிரம்பக்கூடும் என்பதால், பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்வது நல்லது.