தவெக பெரும்பான்மையை நிரூபிப்பதில் சிக்கல் – அடுத்து என்ன நடக்கும்?
TVK Vijay : 108 தொகுதிகளில் வென்றுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது. தற்போது வரை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்துள்ள நிலையில் 116 எம்எல்ஏகளின் ஆதரவு விஜய்க்கு இருக்கிறது. விசிக விரைவில் தங்களின் முடிவை அறிவிக்கவிருக்கிறது.

விஜய்
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மே 4, 2026 அன்று வெளியான நிலையில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து 108 தொகுதிகளில் வென்றுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது. ஆனால் ஆட்சியமைப்பதற்கான போதிய பெரும்பான்மை தவெகவிடம் இல்லை என கூறி ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்த நிலையில், 116 ஆதரவு எம்எல்ஏக்களின் கடிதங்களோடு 3வது முறையாக விஜய் ஆளுநரை சந்தித்தார்.
தவெக பெரும்பான்மையை நிரூபிப்பதில் சிக்கல்
மிகவும் எதிர்பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்கள் முடிவை அறிவிக்காமல் இருந்தது. மேலும் இந்திய முஸ்லீம் லீக் தவெகவிற்கு ஆதரவு இல்லை என தெரிவித்தது அந்த கட்சிக்கு பின்னடைவாக அமைந்தது. இதனால் 3வது முறையாக விஜய்யின் ஆளுநர் சந்திப்பு தோல்வியல் முடிந்தது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் மே 8, 2026 அன்று நடைபெற்ற நிலையில் அந்த கட்சியின் முடிவை மே 9, 2026 நாளை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : காலத்தின் கட்டாயம் – தவெகவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்
இதற்கிடையில் தவெகவிற்கு விசிக வெளியில் இருந்து ஆதரவு, அமைச்சரவையில் பங்கு உள்ளிட்ட தகவல்கள் பரவிய நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதனை முற்றிலும் மறுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் கு.கா.பாவலன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பது தொடர்பாக அக்கட்சியின் சார்பில் ஆதரவு கேட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர் நிலை குழுக் கூட்டம் இன்று இணையவழியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தமிழகம் தழுவிய அளவில் கலந்து கொண்ட உயர்நிலை குழு கூட்டத்தின் உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
ஆகையால் ,அக்கூட்டத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துகள் அடிப்படையில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு நாளை எமது தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். இதற்கிடையே ஊடகங்களில் இரு வேறு மாறுபட்ட கருத்துக்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது தமிழக மக்களிடையே ஒரு குழப்பத்தை விளைவிக்கும். அத்துடன் எமது கட்சியின் மீதான நன்மதிப்பையும் சீர்குலைக்கும் போக்காகும். ஆகவே நாளை காலை எமது தலைவர் அவர்கள் எமது கட்சியின் நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : தவெகவுடன் கூட்டணி இல்லை, வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு – கம்யூனிஸ்ட் கட்சிகள் பரபரப்பு தகவல்
அடுத்து என்ன நடக்கும்?
இந்த நிலையில் அந்த கட்சி மே 9, 2026 ஆதரவு அளிக்கும் நிலையில் தற்போது 116 ஆக இருக்கும் தவெகவின் எம்எல்ஏகளின் ஆதரவு 118 ஆக உயரும். இதனையடுத்து தவெக ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகும். இதற்கிடையில் விசிக தற்போது வரை ஆதரவு அளிக்காத நிலையில் நாளை அந்த கட்சியின் பதவியேற்பு விழா திட்டமிட்டபடி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.