1 கோடி பேர் நீக்கம்.. நீடிக்கும் பரபரப்பு.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
Deceased and migrated voters: நேற்றைய தினம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 1 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், இடம்பெயர்ந்தோர் மற்றும் அந்த இடத்தில் வசிக்காதோர், உயிரிழந்தோர் உள்ளிட்டோரும் அடக்கம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (special intensive revision) நடந்து வரும் நிலையில், இறந்தவர்கள் மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்கள் குறித்த விவரங்கள் அந்தந்த மாவட்ட இணையதளங்களில் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகின்றன. இதில் மேற்கு வங்காளம், ராஜஸ்தான், கோவா ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, அந்த 3 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 1 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், இடம்பெயர்ந்தோர் மற்றும் அந்த இடத்தில் வசிக்காதோர், உயிரிழந்தோர் உள்ளிட்டோரும் அடக்கம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: 2026 சட்டமன்ற தேர்தல்…தவெக-பாஜகவுக்கு…வைகோ மறைமுக எச்சரிக்கை!
டிச.19ல் வரைவு வாக்காளர் பட்டியல்:
தமிழ்நாடு, குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், உத்தரப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும், அந்தமான் – நிக்கோபார் தீவுகள் யூனியன் பிரதேசத்திற்குமான வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. எந்த தகுதியான வாக்காளரும் பட்டியலில் இருந்து விடுபடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மூன்று முறை நடக்கும் சரிபார்ப்பு:
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் குறைந்தது மூன்று முறை அல்லது அதற்கு மேல் நேரில் சென்று தொடர்பு கொள்ள முயன்றும் கிடைக்காத வாக்காளர்களை குறித்து ஆய்வு செய்துள்ளனர். இதில் இறந்தவர்கள், கண்டறிய இயலாதவர்கள், முகவரியில் இல்லாதவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இரட்டை பதிவு செய்தவர்கள் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வகை வாக்காளர்களின் விவரங்களை வாக்குச்சாவடி வாரியாக பட்டியலிட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் பகிர்ந்துள்ளனர். மேலும், இந்த தொடர்பான கூட்டங்களின் நடவடிக்கை குறிப்புகள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரின் உண்மை நிலையை உறுதி செய்யவும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்கு முன்பே ஏதேனும் பிழைகள் இருப்பின் அவற்றை திருத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழக காவல் துறையில் நீடிக்கும் ஆர்டர்லி முறை.. உடனடியாக திரும்பப்பெற தமிழக பொறுப்பு டிஜிபி அபய்குமார் சிங் உத்தரவு..
மாவட்ட இணையதளங்களில் வெளியாகும்:
வரும் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர், இறந்தவர்கள், கண்டறிய இயலாதவர்கள், முகவரியில் இல்லாதவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இரட்டை பதிவு செய்த வாக்காளர்களின் விவரங்களை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் அந்தந்த மாவட்ட இணையதளங்களில் வெளியிடப்படும். பொதுமக்கள் தங்களது விவரங்களை தேவையெனில் இந்த பட்டியலில் சரிபார்த்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.