அதிமுக யாரையும் கூட்டணிக்கு வற்புறுத்தாது.. அடித்துச் சொல்லும் செல்லூர் ராஜூ

Sellur raju about admk alliance: அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் விஜய்க்கு நேரடியாக கூட்டணி அழைப்பு விடுத்து வரும் நிலையில், அதிமுக யாரையும் கூட்டணிக்கு வற்புறுத்தாது என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திட்டவட்டமாக கூறியுள்ளார். தங்கள் மீதான நம்பிக்கையை இழந்து கூட்டணிக்கு அடிபோடுவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இவரது இந்த கருத்து முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

அதிமுக யாரையும் கூட்டணிக்கு வற்புறுத்தாது.. அடித்துச் சொல்லும் செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ

Updated On: 

24 Oct 2025 13:32 PM

 IST

மதுரை, அக்டோபர் 24: அதிமுக யாருடைய கூட்டணிக்கும் அலைந்ததாக வரலாறு கிடையாது என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். விஜய் அரசியலில் கால் பதித்த நேரம் முதல் அதிமுக குறித்து விமர்சிப்பதை அவர் தவிர்ப்பதும், அதேபோல் விஜய் குறித்து விமர்சிப்பதை அதிமுக தவிர்ப்பதும் தொடர் கதையாகி வருகிறது. இது இருதரப்புக்கும் கூட்டணி ஆர்வம் உள்ளதை வெளிப்படையாக அவர்களது நகர்வும் உணர்த்தும் வகையிலேயே இருந்து வந்தன. இதனை பல்வேறு அரசியல் தலைவர்களும் விமர்சித்து வந்த நிலையில், சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினே வெளிப்படையாக அதிமுக தவெகவுடன் கூட்டணி அமைத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பதாக விமர்சித்திருந்தார். எனினும், இதற்கு இபிஎஸ் எதிர்வினையாற்றாமல் இருந்து வந்தார்.

அதோடு, தனது பிரச்சாரக் கூட்டத்தில் தவெக கொடியுடன் சிலர் இருந்ததை பார்த்து, “கொடி பறக்குது.. பிள்ளையார் சுழி போட்டாச்சு” என்று கூட்டணி ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார். அத்துடன், கரூர் விவகாரத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்தும் தவெகவுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வந்தார்.

Also Read:  விளம்பர வெளிச்சம்.. திமுக அரசை விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்!

இரண்டாம் கட்ட தலைவர்கள் நேரடி அழைப்பு:

அண்மையில் கூட அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திமுகவை வீழ்த்தும் சக்திகள் இபிஎஸ் பின்னால் நிற்க வேண்டும் என்றும், நடிகர் விஜய் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும் எனவும் கூறியிருந்தார். அத்துடன், சரியான முடிவு எடுக்கவில்லை என்றால், அது வேறு விதமாக அமைந்துவிடும் என்றும் சூசகமாக அறிவுறுத்தியிருந்தார். இதேபோல், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி போன்ற தலைவர்களும் அதிமுக கூட்டணியுடன் தவெக இணைய வேண்டும் என நேரடியாக அழைப்பு விடுத்து வந்தனர். இது அதிமுக மீது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. பெரும் கட்சியாக இருந்துக்கொண்டு கூட்டணிக்கு புதிய கட்சிக்கு வலிந்து அழைப்பு விடுப்பதாகவும் விமர்சிக்கப்பட்டது.

Also Read:  விஜயகாந்த் போல விஜய் – டிடிவி தினகரன் சொன்ன விஷயம்

செல்லூர் ராஜூ திடீர் பல்டி:

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற அதிமுக 54வது தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, சிலர் அதிமுக கூட்டணிக்கு தவித்து வருவதாக கூறுகின்றனர். அவ்வாறு நாங்கள் கூட்டணிக்காக அழைந்ததாக வரலாறே கிடையாது. அதிமுக எந்த சூழ்நிலையிலும், எந்த நேரத்திலும் யாரையும் கூட்டணிக்கு வம்பாக அழைத்தது கிடையாது. எங்களை பொறுத்தவரையில், எங்கள் கொள்கையை ஏற்று, எங்களுக்கு துணையாக தமிழக மக்களை காப்பாற்ற யார் துணை வந்தாலும், அவர்களை தூக்கி கொண்டாடுவோம். அதிமுக யாருக்கும் துரோகம் இழைத்தது இல்லை. நண்பர்களுக்காக உயிரையும் கொடுப்போம், தோழர்களுக்கு தோள்களை கொடுப்போம். ஆனால், அதே தோழர் காதை கடித்தால், தூக்கி கீழேபோட்டு மிதிக்கவும் செய்வோம் என்பதே அதிமுக வரலாறு. எங்களது கூட்டணியில் இருந்த காங்கிரஸாக இருக்கட்டும், பாஜகவாக இருக்கட்டும் அவர்களுக்காக உயிரை கொடுத்து எங்களது தொண்டர்கள் உழைப்பார்கள் என்ற கூறினார்.