நாளை மீண்டும் பள்ளிகள் திறப்பு.. 24வது நாளாக நீடிக்கும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்..
Secondary school teachers protest: அமைச்சர் அன்பில் மகேஷின் பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. அவரது இடைக்கால நிவாரணத்தை இடைநிலை ஆசிரியர்கள் ஏற்க மறுத்து, போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அந்தவகையில், 23வது நாளாக சென்னை சைதாப்பேட்டையில் ஆசிரியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டனர்.

24வது நாளாக நீடிக்கும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
சென்னை, ஜனவரி 18: 5 நாட்கள் விடுமுறை முடிந்து நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கும் நிலையில், ஆசிரியர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 24வது நாளாக இன்றும் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, தங்களது கோரிக்கையை அரசு ஏற்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றும், பொங்கல் பண்டிகைக்கு கூட சொந்த ஊர் செல்லாமல் போராட்டத்தை தொடர்கின்றனர். இதனிடையே, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், இடைநிலை ஆசிரியர்களுடன் ஜன.14-ம் தேதி நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது.
மேலும் படிக்க: பொங்கலுக்கு நடனமாடிய காவலர்கள்.. நடவடிக்கை பாய்ந்ததால் சர்ச்சை.. உத்தரவு உடனே வாபஸ்…
ரூ.2,500 ஊதிய உயர்வை ஏற்காத ஆசிரியர்கள்:
அந்தவகையில், இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த ஜனவரி 14 அன்று ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், இடைநிலை ஆசிரியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2,500 ஊதிய உயர்வு வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். அதன்படி, தற்போது ரூ.12,500 ஊதியமாக பெற்று வரும் ஆசிரியர்களுக்கு, ரூ.15,000 ஆக ஊதியம் உயர்த்தி தரப்படும் என்று அவர் கூறினார்.
ஊதிய உயர்வு இடைக்கால நிவாரணமே:
அதோடு, தேர்தல் வாக்குறுதிகளை விரைவில் செயல்படுத்துவோம் என்றும் உறுதி தெரிவித்தார். 2 ஆண்டுகளாக ரூ.3,548 கோடி கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் உள்ளதாக தங்களது விளக்கத்தை கூறிய அவர், நிதி பற்றாக்குறையால் ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார். அதோடு, ரூ.2,500 ஊதிய உயர்வு என்பது இடைக்கால நடவடிக்கையே என்பதால், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை:
எனினும், அவரது இந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. அவரது இடைக்கால நிவாரணத்தை இடைநிலை ஆசிரியர்கள் ஏற்க மறுத்து, போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அந்தவகையில், 23-வது நாளாக சென்னை சைதாப்பேட்டையில் ஆசிரியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் ஆசிரியர்களை கைது செய்த போலீசார் அருகே உள்ள மண்டபங்களில் அடைத்து வைத்து மாலையில் விடுவித்தனர். கடந்த டிச.26-ம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க : தமிழகத்தில் இந்த இருமல் மருத்துக்கு தடை.. குழந்தைகளுக்கு தவறிக்கூட இதை கொடுக்காதீர்கள்!!
5 நாட்கள் விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறப்பு:
இதனிடையே, 5 நாட்கள் பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் நாளை (ஜனவரி.19) திறக்கப்பட உள்ளன. இதனால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படும் என்பதால் ஆசிரியர்களின் போராட்டத்தை தமிழக அரசு முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென கல்வியாளர்கள், பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.