குடிநீரில் ஆபத்தான உப்புத் தன்மை.. சிறுநீரக கோளாறால் அவதியுறும் கிராம வாசிகள்..
Perumbakkam Salty Drinking Water: பெரும்பாக்கம் பகுதியில் உப்புக் கலந்த குடிநீரைப் பயன்படுத்தி வந்ததால் 20-க்கும் மேற்பட்டோருக்குச் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பற்ற குடிநீரால் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், சுத்திகரிக்கப்பட்ட நல்ல குடிநீர் வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி, அக்.09: மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளில் மிக முக்கியமான ஒன்றான குடிநீர் பாதுகாப்பற்ற முறையில் விநியோகிக்கப்படும் போது, அது மனித உயிர்களுக்கே பேராபத்தாக முடிகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வரும் குடிநீரில் அளவுக்கு அதிகமாக உப்புத் தன்மை கலந்துள்ளதால், அப்பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்குச் சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் சிறுநீரகப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தங்களின் அன்றாடக் குடிநீர் தேவைக்கே வழியின்றி அப்பகுதி கிராம மக்கள் கடுமையான அச்சத்திலும் வேதனையிலும் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிக்க: ஏடிஎம் கொள்ளைக்கு ‘சிறப்பு பயிற்சி’ வகுப்புகள்.. வடமாநிலக் கும்பலின் பகீர் பின்னணியைக் கண்டறிந்த தமிழ்நாடு போலீஸ்!
உப்புக் குடிநீரால் அதிகரித்த சிறுநீரகப் பாதிப்பு:
பெரும்பாக்கம் கிராமத்தில் நீண்ட நாட்களாகவே பஞ்சாயத்து அல்லது உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீரில் உப்புத் தன்மை அதிகளவில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. வேறு வழியின்றி இந்த உப்புக் கலந்த நீரையே சமையலுக்கும் குடிநீருக்கும் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இதன் காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கு அடுத்தடுத்து உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்தபோது, அவர்களுக்குச் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டு, அதில் 20-க்கும் மேற்பட்டோர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது தெரியவந்துள்ளது.
சிகிச்சை பெற முடியாத நிலையில் மக்கள்:
சிறுநீரகப் பாதிப்பால் அவதியுற்று வரும் கிராம மக்கள் தொடர் மருத்துவச் சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் செய்ய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த கிராம மக்களால் இந்தச் சிகிச்சைகளுக்கான பெருந்தொகையைச் செலவழிக்க முடியாமல் திணறி வருகின்றனர். சுத்திகரிக்கப்படாத மற்றும் உப்புத் தன்மை நிறைந்த நீரையே தொடர்ச்சியாகப் பருகியதே இந்தத் திடீர் நோய்ப் பரவலுக்குக் காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதையும் படிக்க: சுங்கத்துறையிடம் சிக்கிய லேண்ட் க்ருசர்.. ஆதவ் அர்ஜூனா நிறுவனத்திடம் ரூ.2.60 கோடி மோசடி.. சிக்கிய கர்நாடக இடைத்தரகர்!
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க கோரிக்கை:
இந்த ஆபத்தான சூழலைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் உடனடியாக பெரும்பாக்கம் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்திப் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என ஊர்மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், அப்பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீரின் தரத்தைப் பரிசோதித்து, உப்புக் கலந்த நீர விநியோகிப்பதை உடனடியாக நிறுத்திவிட்டு, பாதுகாக்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கக் தொட்டி மூலம் நல்ல குடிநீரை வழக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.