சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கு..ராஜபாளையத்தில் எஸ்ஐடி குழு விசாரணை!
Sabarimala Gold Theft Case SIT Team Investigating Rajapalayam: கேரள மாநிலம், சபரிமலை கோயில் தங்க திருட்டு வழக்கு தொடர்பாக ராஜபாளையத்தைச் சேர்ந்த ஒருவரிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டது. மேலும், அவரை கேரளாவுக்கு வருமாறு கூறியது .

ராஜபாளையத்தில் எஸ்ஐடி குழு விசாரணை
கேரள மாநிலம், பத்தினம் திட்டா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் துவார பாலகர் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்க கவசம் மற்றும் நிலைக் கதவில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடு ஆகியவை கடந்த 2019- ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் செப்பனிடும் பணிக்காக கொடுக்கப்பட்டிருந்தது. இந்தப் பணிகள் முடிந்த போது, சுமார் 4.54 கிலோ தங்கம் குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க கேரள நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டது. அதன்படி, இந்த வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்களான பத்மகுமார், வாசு, நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், உன்னிகிருஷ்ணன், தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
தங்க திருட்டு வழக்கில் தொடர்பு
இந்த நிலையில், இந்த வழக்கில் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன் கொல்லங்கொண்டான் இந்திரா நகரை சேர்ந்த கிருஷ்ணனுக்கு தொடர்பு இருப்பது சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தெரிய வந்தது. அதன் பேரில், சிறப்பு புலனாய்வு குழுவின் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் பாபு தலைமையிலான போலீசார் ராஜபாளையத்தில் கிருஷ்ணனின் வீட்டில் அண்மையில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு…சிபிஐ விசாரணை வளையத்தில் வருகிறாரா விஜய்!
சேத்தூர் காவல் நிலையத்தில் விசாரணை
இதைத் தொடர்ந்து, கிருஷ்ணனை சேத்தூர் ஊரக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்ற விசாரணை மேற்கொண்டனர். பின்னர், கேரளாவில் உள்ள சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(டிசம்பர் 30) ஆஜராக வேண்டும் என்று கிருஷ்ணனுக்கு புலனாய்வு குழுவினர் அறிவுறுத்தியிருந்தனர். அதன்படி, அவர் கேரளா சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது.
சபரிமலை குறித்து கேள்வி கேட்கவில்லை
இது தொடர்பாக கிருஷ்ணன் கூறுகையில், எனது வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு மேற்கொண்ட சோதனையில், எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை. சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் என்னிடம் மேற்கொண்ட விசாரணையில் இருவரின் பெயரை கூறி தெரியுமா என கேட்டனர். அதற்கு, நான் தெரியாது என்று பதில் அளித்தேன். சபரிமலை வழக்கு குறித்து எந்த கேள்வியும் என்னிடம் கேட்கவில்லை என்று தெரிவித்தார்.
இரிடியம் வழக்கில் தொடர்புடையவர்
கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த கிருஷ்ணன் கடந்த 15 ஆண்டுகளாக தனது சொந்த ஊரான ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியில் வசித்து வருகிறார். இவர், மீது இரிடியம் கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கேரள போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டதால் ராஜபாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க: திமுகவின் தேர்தல் அறிக்கை…. மக்களும் நேரடியாக கருத்து தெரிவிக்கலாம்… திமுகவின் புதிய செயலி