Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தேவர் ஜெயந்தி விழா – ராமநாதபுரத்தில் இந்த 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு லீவு

Thevar Jayanthi: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருகிற அக்டோபர் 30, 2025 அன்று நடைபெறவிருக்கிற முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குரு பூஜை நடைபெறவுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தேவர் ஜெயந்தி விழா –  ராமநாதபுரத்தில் இந்த 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு லீவு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 25 Oct 2025 16:56 PM IST

ராமநாதபுரம் (Ramanathapuram) மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் வருகிற 30, 2025 அன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய அமைப்புகள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். இதனை முன்னிட்டு  மாவட்டம் முழுவதும் பெரிய அளவில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில், விழா நாட்களில் மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு மற்றும் அமைதியை உறுதிப்படுத்தும் வகையில், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக்  (TASMAC) மதுபான கடைகள் மூன்று நாட்கள் மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளார்.

3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் செயல்படாது

அதன்படி, ராமநாதபுரத்தில் அக்டோபர் 28, 29 மற்றும் 30, 2025 ஆகிய 3 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவைப் பற்றிப் பேசிய மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, ”தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நாட்களில் மாவட்டத்தில் தேவையற்ற குழப்பங்கள், மோதல்கள் அல்லது சட்ட ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : வரும் அக்.27 கரூர் மக்களை சந்திக்கும் விஜய்.. எங்கே? வெளியான தகவல்..

மக்கள் அமைதியாக விழாவில் பங்கேற்க வேண்டும். டாஸ்மாக் கடைகள் மூடப்படும் நிலையில், மதுபானங்களை சட்டவிரோதமாக கள்ள சந்தைகள் வழியாக விற்கும் நபர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மேலும், இந்த அறிவிப்புடன், மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பும் கண்காணிப்பும் கூடுதல் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ராமநாதபுரத்தில் உள்ள பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா அக்டோபர் 30, 2025 அன்று வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்க மாநிலம் முழுவதும் இருந்து அரசியல் கட்சி பிரமுகர்கள், சமுதாய மக்கள் ஆகியோர் பங்கேற்பது வழக்கம். குறிப்பாக இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்பதன் காரணமாக சில அசம்பாவிதங்கள் நடக்கக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : பல்லாவரம் வாரச் சந்தை.. 600 கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல்..

தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்கும் துணைக்குடியரசுத் தலைவர்

துணைக் குடியரசுத் தலைவராக பதவேற்ற பிறகு 3 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வரும் சி.பி.ராதாகிருஷ்ணன், அக்டோபர் 30, 2025 அன்று பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்கிறார். தேவர் ஜெயந்தி விழாவில் இதுவரை எந்த பிரதமரும், குடியரசுத் தலைவரோ, துணைக் குடியரசுத் தலைவரோ பங்கேற்காத நிலையில் முதன்முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.