தமிழகத்தில் இன்று பகலில் வெப்பம், இரவில் மழை.. வானிலை மையம் சொல்வது என்ன?
Rain in Tamil Nadu today: தமிழக்கத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதுவும், பகலில் வெப்பத்துடன் வெயில் வாட்டும் என்றும், மாலை நேரத்திற்கு பின் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் முன்னறிவித்துள்ளது.

கோப்புப்படம்
சென்னை, அக்டோபர் 31: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. பருவமழை சற்று இடைவெளி விட்ட நிலையில், வெப்பச் சலனம் காரணமாக்க இன்று முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் வடக்கிழக்கு பருவமழையானது இந்தாண்டு வழக்கத்தை விட முன்பாகவே தொடங்கியது. தொடர்ந்து, வங்கக்கடலில் இரண்டு முறை காற்றழுத்த தாழ்வு உருவானது. அதில் ஒன்று ‘மோன்தா’ புயலாக உருமாறி ஆந்திரா அருகே கரையைக் கடந்தது. இந்த மோன்தா புயல் காரணமாக, தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. எனினும், தமிழகத்தின் இதர பகுதிகளில் மழையின்றி, அதிக வெப்பமே காணப்பட்டது.
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு:
தமிழகம், புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இதனால், தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது.
இந்த காற்று வேகமாறுபாடு காரணமாக அக்டோபர்31 முதல் நவம்பர் 4ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 5ஆம் தேதி ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. பெரும்பாலான இடங்களில் பகலில் வெயில் இருக்கும் என்றும், இரவில் மழை பெய்யும் எனவும் கூறியுள்ளது.
குறிப்பாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மழைக்கு வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளது. மேலும், தமிழக கடலோர பகுதிகளில் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
Also read: கரையை கடந்த தீவிர புயல்.. தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. சென்னையில் எப்படி?
24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை:
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில், 6 செ.மீ மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் சோலையார், வால்பாறை, நீலகிரி மாவட்டம் செருமுள்ளி ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பெய்துள்ளது. தென்காசி மாவட்டம் குண்டாறு அணையில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.