மே மாதம் மகளிர் உரிமைத் தொகை வருமா? பெண்கள் மத்தியில் எழும் கேள்வி… பதில் இதோ!
kalaignar Magalir Urimai Thittam: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காரணத்தாலும், புதிய அரசு ஆட்சி அமைக்காததாலும் மே மாதம் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுமா என்ற கேள்வி பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்
தமிழகத்தில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில், தமிழகத்தில் 1.31 கோடி பெண்களுக்கு மாதம் தோறும் ரூ. 1,000 கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இந்த திட்டத்தின் கீழ், 1.14 கோடியாக இருந்த பயனாளிகளின் எண்ணிக்கை தற்போது புதிதாக திருமணம் ஆனவர்கள் ரேஷன் அட்டை பெற்றவர்கள் மற்றும் விடுபட்டவர்கள் உள்ளிட்டோர் என 1.31 கோடி பேராக அதிகரித்து மகளிர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் காரணத்தால் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படாத நிலை இருந்தது.
முன்கூட்டியே வரவு வைக்கப்பட்ட ரூ.5 ஆயிரம் உதவித் தொகை
இதனால், தமிழக அரசு பிப்ரவரி மாதம் அனைத்து மகளிர் வங்கி கணக்கிலும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு முன்கூட்டியே கலைஞர் மகளிர் உரிமை தொகையாக ரூ.3,000 மற்றும் கோடைகால சிறப்பு தொகுப்பு நிதியாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 அனைத்து மகளிர் வங்கி கணக்கிலும் வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் முடிந்து வருகிற மே 4- ஆம் தேதி ( திங்கள்கிழமை) பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில், எந்த கட்சி ஆட்சி அமைக்கப் போகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் படிக்க: கொடைக்கானலில் ஜாலியாக சைக்கிள் ஓட்டிச்சென்ற முதல்வர் ஸ்டாலின்.. ஆர்வத்துடன் கண்டு ரசித்த பொது மக்கள்..
மே மாதம் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுமா
அத்துடன், மே மாதம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுமா என்ற கேள்வியும், சந்தேகமும் பொதுமக்கள் மத்தியில் எழத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் வருகிற மே 6- ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. எனவே, அதன் பின்னரே மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. அதிலும், திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் பட்சத்தில் மே 2- ஆவது வாரத்தில் மகளிர் உரிமைத்தொகை வழக்கம் போல விநியோகிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய கட்சி ஆட்சி அமைக்கும் பட்சத்தில்
ஆனால், வேறு கட்சிகள் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் புதிய அரசு அமைந்த பிறகு மகளிர் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும். இதனால், புதிய அரசு அமைந்தால் அவர்களின் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் பெற்று, அதற்கான நிதி தாமதமாகவே விடுவிக்கப்படும் நிலை உள்ளது. ஒரு வேளை திமுக மீண்டும் பொறுப்பேற்றாலும் உடனடியாக மே மாதம் ரூ.2,000 வழங்கப்படாது. ஏற்கனவே, வழங்கப்படுவது போன்று மே மாதம் ரூ.1,000 வழங்கப்படும். அதன் பின்னரே மேலும், ரூ.1,000 உயர்த்தி வழங்கப்படும்.
மேலும் படிக்க: தேர்தல் முடிவுகள்.. குழந்தைகளின் மனநிலையைக் கவனியுங்கள்.. பெற்றோர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!!