ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே! மக்கள் மத்தியில் மறைந்து-மறந்து போன பொங்கல் வாழ்த்து அட்டைகள்!
Pongal Greeting Cards: தமிழகத்தில் நவீன் செல்போன்கள் மற்றும் சமூக வலைதளங்களால் பொது மக்கள் மத்தியில் பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கான வாழ்த்து அட்டைகளின் பயன்பாடு மறைந்து போய்விட்டது. தற்போது, பண்டிகை வாழ்த்து அட்டை பயன்பாடு எப்படி இருந்தது என்பதை இந்தப் பதிவின் மூலம் சற்று அசைபோடுவோம்.
தமிழகத்தில் 2000-ஆம் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது பொது மக்களின் கைகளில் செல்போன்கள் தவழுவதற்கு முன்பாக பொங்கல் பண்டிகை, தீபாவளி பண்டிகை, புத்தாண்டு பண்டிகை, கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகை என்பன உள்ளிட்ட பண்டிகைகள் வந்தாலே, சாதாரண பெட்டி கடைகள் முதல் பெரிய அளவிலான கடைகள் வரை அனைத்திலும் பண்டிகை வாழ்த்து அட்டைகள் விற்பனைக்கு வந்து விடும். இந்த வாழ்த்து அட்டைகளை பொது மக்கள் கடைகளுக்கு நேரடியாக சென்று, அதில், மனதுக்கு நெருக்கமான அட்டைகளை தேர்வு செய்து, அதனை கைப்பட வாழ்த்து செய்தியை எழுதி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கும் பழக்கம் அனைத்து தரப்பு மக்களிடமும் இருந்து வந்தது. இந்த அட்டைகள் சாதாரணமாக ரூ.1- இல் இருந்து ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
பல்வேறு விதமாக வாழ்த்து அட்டைகள்
இந்த பண்டிகை வாழ்த்து அட்டையில் பொங்கல் பானை, கரும்பு, மாடுகள் இருப்பது போலவும், பிரபல ஹீரோ, ஹீரோயின்கள் இருப்பது போலவும், தீபாவளி வாழ்த்து அட்டையில் பட்டாசுகள் வெடிப்பது போலவும் வாழ்த்து அட்டைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும். இந்த வாழ்த்து அட்டைகளை பொதுமக்கள் வாங்கி வந்து அதில், ஸ்டாம்ப் ஒட்டி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தபால் மூலம் அனுப்பி விடுவர். இவ்வாறு அனுப்பப்படும் வாழ்த்து அட்டைகளை பெறுவதற்காக தங்களது ஊருக்குள் நுழையும் தபால்காரரிடம் சென்று எனது பெயரில் ஏதேனும் வாழ்த்து அட்டை வந்துள்ளதா என கேட்பார்கள்.
மேலும் படிக்க: பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்கவில்லையா? உங்களுக்கான சிறப்பு அறிவிப்பு!!




பொக்கிஷமாக பாதுகாக்கப்படும் வாழ்த்து அட்டை
அப்போது, அந்த தபால் காரரும் தனது தபால் பையை திறந்து பார்த்து வாழ்த்து அட்டையே எடுத்துக் கொடுப்பார். அந்த அட்டையை வாங்கிய நபரும் அதனை ஒரு வித மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் பிரித்து பார்த்து சந்தோஷம் அடைவார். மேலும், அந்த அட்டை யாரிடமிருந்து வந்துள்ளது. அது என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை படித்து பார்த்து மகிழ்ச்சி அடைவதுடன், நீண்ட நாட்கள் அதை ஒரு பொக்கிஷம் போல பாதுகாக்க தொடங்குவர்.
வாழ்த்து அட்டைகளின் ஆயுள் காலம் நிறைவு
இவ்வாறாக 2000-ஆம் ஆண்டுக்கு முன்பு பண்டிகை வாழ்த்து அட்டைகள் மிகவும் பிரபலமாக இருந்து வந்தது. ஆனால், சாதாரண பட்டன் போன்கள் அறிமுகம் ஆன பின்னர், பொங்கல், தீபாவளி வாழ்த்து அட்டைகளின் வாழ்நாள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது. தற்போது, ஸ்மார்ட் செல்போன்கள் பொதுமக்களின் 6- ஆம் விரலாக மாறிப் போனதால், வாழ்த்து அட்டைகளின் ஆயுள் காலம் முடிந்து, வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் தங்களது பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பழைய காலத்தில் இருந்த வாழ்த்து அட்டைகளின் சுவாரசியம் தற்போது உள்ள இளைஞர்கள் மத்தியில் பெரிதாக காணப்படுவதில்லை.
மேலும் படிக்க: பொங்கல் பண்டிகை…உறவினர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்த்து செய்தி…இப்படி அனுப்பலாம்!