கடலூரில் காவலர்களை அரிவாளால் வெட்டிய ரெளடி…துப்பாக்கி குண்டுகளை இறக்கிய போலீசார்!
Cuddalore Police Open Fire: கடலூர் மாவட்டத்தில் இரு காவலர்களை ஆயுதத்தால் வெட்டி விட்டு தப்பி ஓடிய ரெளடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதில், அவரின் இரு கால்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. நெய்வேலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே ரமேஷ் என்பவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்று வியாழக்கிழமை ( ஜனவரி 16) சுபாஸ்கர் என்ற ரவுடி இலவசமாக காய்கறிகளை கேட்டுள்ளார். அப்போது, இலவசமாக காய்கறிகள் தர முடியாது என்று கடையின் உரிமையாளர் ரமேஷ் கூறியுள்ளார். இதில், ரௌடியான எனக்கே இலவசமாக காய்கறி தர முடியாதா எனக் கூறி ரமேஷிடம், ரவுடி சுபாஷ்கர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் இருவரிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், காய்கறி கடையின் உரிமையாளர் ரமேஷை, சுபாஸ்கர் வெட்டினார். பின்னர், அந்தப் பகுதியில் கூட்டம் கூடியதால், அங்கிருந்து ரவுடி சுபாஸ்கர் தப்பி சென்று விட்டார். அவர் வெட்டியதில் காயம் அடைந்த காய்கறி கடை உரிமையாளர் ரமேஷ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரவுடியை கைது செய்ய தனிப்படை
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ரமேஷ் அளித்த புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில், நெய்வேலியை சேர்ந்த ரவுடி சுபாஸ்கர் என்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவரை கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்படி, தனிப்படை போலீசார் நெய்வேலி அருகே உள்ள இந்திரா நகர் பகுதியில் பதுங்கி இருந்த சுபாஸ்கரை பிடிக்க சென்றனர்.
மேலும் படிக்க: வேலூர் சிஎம்சி மருத்துவமனை மருத்துவர்கள் குடியிருப்பில் அமலாக்கத் துறை சோதனை…முக்கிய ஆவணங்கள் கைப்பற்றல்!




ரவுடி சுபாஸ்கர் மீது போலீசார் துப்பாக்கி சூடு
அப்போது, போலீசாரை பார்த்ததும் ரவுடி சுபாஸ்கர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். உடனே, போலீசார் அவரை துரத்தி சென்றனர். பின்னர், அவரை சுற்றி வளைத்த போலீசார் அவரை சரணடையுமாறு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், சரணடைய மறுத்த சுபாஷ்கர் கையில் வைத்திருந்த ஆயுதத்தால் இரு காவலர்களை வெட்டினார். இதனை சற்றும் எதிர்பாராத போலீசார் திகைத்து நின்றனர். உடனே, சுதாரித்துக் கொண்ட போலீசார் சுபாஸ்கரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
சம்பவ இடத்தில் எஸ். பி. விசாரணை
இதில், அவரது இரு கால்களிலும் துப்பாக்கி குண்டுகள் துலைத்து கீழே விழுந்தார். உடனே, அவரை போலீசார் மீட்டு நெய்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல, ரவுடி சுபாஸ்கர் வெட்டியதில் காயம் அடைந்த இரு போலீசாரும் நெய்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் படிக்க: அதிமுக அலுவலகத்தில் செயலாளர் தூக்கிட்டு தற்கொலை…என்ன காரணம்…போலீசார் விசாரணை!