Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கஞ்சா புகைத்த மாணவர்களை போட்டுக்கொடுத்த சிறுவர்கள் மீது கடும் தாக்குதல் – வீடியோ வைரலான நிலையில் போலீஸ் வழக்குப்பதிவு

விருதுநகர் மாவட்டத்தில், கஞ்சா புகைப்பது குறித்து பெற்றோர்களிடம் தகவல் அளித்த இரண்டு சிறுவர்களை தாக்கியதாக, பள்ளி மாணவர்கள் 4 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கஞ்சா புகைத்த மாணவர்களை போட்டுக்கொடுத்த சிறுவர்கள் மீது கடும் தாக்குதல் – வீடியோ வைரலான நிலையில் போலீஸ் வழக்குப்பதிவு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 18 Dec 2025 21:28 PM IST

விருதுநகர், டிசம்பர் 18: விருதுநகர் (Virudhunagar) மாவட்டத்தில், கஞ்சா புகைப்பது குறித்து பெற்றோர்களிடம் தகவல் அளித்த இரண்டு சிறுவர்களை தாக்கியதாக, பள்ளி மாணவர்கள் 4 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  விருதுநகர் மாவட்டம் சிவகாசி (Sivakasi) அருகே உள்ள ஒண்டிப்புலி நாயக்கனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பள்ளி மாணவர்கள் 4 பேர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதை அதே பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய இரண்டு சிறுவர்கள் நேரில் பார்த்துள்ளனர். இதனையடுத்து சிறுவர்கள் இருவரும் மாணவர்களின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

கஞ்சா பயன்படுத்திய மாணவர்கள் குறித்து புகாரளித்த சிறுவர்கள் மீது தாக்குதல்

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், கஞ்சா பயன்படுத்திய மாணவர்களை தண்டித்ததாக கூறப்படுகிறது. இது அந்த பள்ளி மாணவர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கோபமடைந்த அந்த நான்கு பள்ளி மாணவர்களும், தங்கள் பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்த இரண்டு சிறுவர்களையும் பழிவாங்க முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிக்க : சர்ச்சைக்குரிய திருப்பரங்குன்றம் மலை…சந்தனக்கூடு விழா நடத்த அனுமதி…இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு!

இதனைத் தொடர்ந்து, அந்த சிறுவர்களை அருகிலுள்ள பழைய தண்ணீர் தொட்டி பகுதியில் அழைத்துச் சென்ற அவர்கள், அங்கு சிறுவர்களை கடுமையாக தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தை தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, வாட்ஸ் ஆப் குழுவில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

வைரலாகும் அந்த வீடியோவில், தாக்குதலுக்கு உள்ளான இரண்டு சிறுவர்களும் வலியில் அலறியபடி, மன்னிப்பு கேட்கின்றனர். அதோடு, அவர்களை கட்டாயப்படுத்தி போதைப்பொருள் பயன்படுத்த வைத்த காட்சிகளும் வீடியோவில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் மாணவர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

காவல்துறையினர் வழக்குப்பதிவு

இந்த சம்பவம் தொடர்பாக, ஒண்டிப்புலி நாயக்கனூர் கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் அளித்த புகாரின் பெயரில் ஆமத்தூர் காவல்நிலையத்தை சேர்ந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் 4 மாணவர்கள் மீது புகார் உறுதியான நிலையில், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் வைரலாகும் வீடியோவையும் கருத்தில் கொண்டு விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க : பால் கலப்படத்தை தடுக்க புதிய கொள்கை…தமிழக அரசு அதிரடி!

தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது குறித்து சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வரும் நிலையில், இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.