3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளிக்கு கனவிலும் நினைத்திடாத தண்டனை.. நெல்லை போக்ஸோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Tirunelveli 3 Minors Harassment: திருநெல்வேலி மாவட்டத்தில் 3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு தூக்கு தண்டனை விதித்து மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்த முழு விவரம்.

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்கு தண்டனை விதிப்பு
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் பகுதியில் 6, 7, 8- ஆகிய வயதுடைய 3 சிறுமிகளை அந்த பகுதியை சேர்ந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதில், உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிகளை அவர்களது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த சிறுமிகளின் பெற்றோர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், அதே பகுதியை சேர்ந்த ஆனந்த சேகர் ( 40 வயது ) என்பவர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, அந்த நபரை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு
இந்த போக்சா வழக்கு நெல்லை மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், குற்றம் சாட்டப்பட்ட ஆனந்த சேகர், சிறுமிகளின் பெற்றோர், வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்ட போலீசார் உள்ளிட்ட பலதரப்பட்டோரிடம் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த போக்ஸோ வழக்கானது இறுதி கட்டத்தை எட்டியது. அதன்படி, இந்த வழக்கு விசாரணையானது இன்று வியாழக்கிழமை ( மார்ச் 12) நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும் படிக்க: காட்டுக்குள் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை கொலை.. இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்.. 6 தனிப்படைகள் அமைப்பு!
தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளிப்பு
இதில், குற்றம் சாட்டப்பட்ட ஆனந்த சேகர் என்பவருக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார். அதனுடன், பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கும் தலா ரூ.7 லட்சம் வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். சம்பவம் நடைபெற்று 3 ஆண்டுகளுக்குள் இந்த வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தண்டனை விதிக்கப்பட்ட ஆனந்த சேகர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தமிழகத்தில் சமீப காலமாக பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
கோவையில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்
கடந்த 2019- ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் நடைபெற்ற கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதே போல, கோவை விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு பின்னரும் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னையில், கல்லூரி மாணவி காரில் கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். எனவே, இது மாதிரியான குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு நெல்லை போக்சோ நீதிமன்றம் அளித்த தீர்ப்பை குற்றவாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று கருத்து எழுந்து வருகிறது.
மேலும் படிக்க: நகைக்காக நடந்தக் கொடூரக் கொலை.. உதவி செய்வது போல் நடித்து கைவரிசை காட்டிய தாய் – மகள் கைது!!