தைலாபுரம் ராமதாஸ் வீட்டில் துப்பறியும் குழுவினர் சோதனை.. அறிக்கைக்கு பின் நடவடிக்கை என தகவல்..
Inspection At Ramadoss House: சென்னையை சேர்ந்த தனியார் துப்பறியும் நிறுவனத்திலிருந்து ஐந்து பேர் தைலாபுரத்தில் இருக்கக்கூடிய ராமதாஸ் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். ஒட்டு கேட்கும் கருவியை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த பின்னர் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
தைலாபுரம், ஜூலை 13, 2025: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி இருப்பதாக குற்றச்சாட்டை முன் வைத்தார். இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் இருக்கக்கூடிய அவரது வீட்டில் தான் அமரும் நாற்காலிக்கு அருகில் ஒட்டு கேட்கும் கருவி இருப்பதாகவும், மிகவும் விலை உயர்ந்த இந்த ஒட்டு கேட்கும் கருவி லண்டனில் இருந்து வாங்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்தார். இதனை தொடர்ந்து தைலாபுரத்தில் இருக்கக்கூடிய அவரது வீட்டில் சென்னையை சேர்ந்த தனியார் துப்பறியும் நிறுவனம் சோதனை மேற்கொண்டனர். விருதாச்சலத்தில் ஜூலை 11 2025 அன்று நடந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிறுவனர் ராமதாஸ் இந்த குற்றச்சாட்டை முன் வைத்தார் அதனைத் தொடர்ந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
தைலாபுரம் வீட்டில் சோதனை:
சென்னையை சேர்ந்த தனியார் துப்பறியும் நிறுவனத்திலிருந்து ஐந்து பேர் தைலாபுரத்தில் இருக்கக்கூடிய ராமதாஸ் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை சுமார் 3 மணி நேரம் நீடித்தது. ராமதாஸ் வீட்டில் வைக்கப்பட்டு உள்ள ஒட்டு கேட்கும் கருவியை ஆய்வு செய்வதற்காக இந்த குழு வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது. சோதனைக்கு பின்னர் அவர்கள் கிளம்பிச் சென்றனர்.
Also Read: பா.ம.க.வில் உள்-கட்சி மோதல்: ராமதாஸ் சமூக வலைத்தள கணக்குகள் கைப்பற்றப்பட்டதாக குற்றச்சாட்டு
ஒட்டு கேட்கும் கருவியை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த பின்னர் என்ன மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதாவது இந்த அறிக்கையை பொறுத்து சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் இந்த ஒட்டு கேட்கும் கருவி தொடர்பாக யார் மீதும் சந்தேகம் இருக்கிறதா? என்பது தொடர்பான கேள்விக்கு யார் மீதும் சந்தேகம் இல்லை என்றும் அறிக்கை வந்த பின்பு தெரிய வரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Also Read: லாக் அப் மரணங்களை கண்டித்து த.வெ.க இன்று சென்னையில் போராட்டம்.. கலந்துக்கொள்வாரா விஜய்?
சமூக வலைத்தள கணக்குகள் கைப்பற்றப்பட்டதாக குற்றச்சாட்டு:
இது ஒரு பக்கம் இருக்க பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி இடையே மோதல் தீவிரமாகும் நிலையில் ராமதாஸின் சமூக வலைதள கணக்குகள் தொடர்பாக புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. அதாவது கட்சி நிறுவனர் ராமதாஸ் அவரது எக்ஸ் மற்றும் முகநூல் கணக்குகள் அன்புமணி ஆதரவாளர்கள் கைப்பற்றி உள்ளதாக குற்றச்சாட்டை முன் வைத்தார். பாஸ்வேர்டுகள் மாற்றப்பட்டு கணக்குகளை மீட்டெடுக்க முடியாத நிலையில் இது தொடர்பாக தமிழக டிஜிபி இடம் புகார் மனு வழங்கியுள்ளார்.