திருவனந்தபுரம்-தாம்பரம் அம்ரித் பாரத் ரயில் சேவை…நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
Amrit Bharat Train Service: திருவனந்தபுரம் - தாம்பரம் இடையேயான அம்ரித் பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார். இந்த ரயில் மூலம் தமிழகத்தின் தென் மாவட்ட மக்கள் மிகுந்த பயன் அடைவார்கள் .

திருவனந்தபுரம்-தாம்பரம் அம்ரித் பாரத் ரயில் சேவை
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து தாம்பரத்துக்கு வாரந்தோறும் அம்ரித் பாரத் ரயில் (வண்டி எண்: 06122) இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை வெள்ளிக்கிழமை ( ஜனவரி 23) காலை 10:45 மணிக்கு திருவனந்தபுரத்தில் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இந்த ரயிலானது, திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு குளித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக தாம்பரம் ரயில் நிலையத்தை அன்று நள்ளிரவு 12:30 மணிக்கு வந்து சேரும். இந்த அம்ரித் பாரத் ரயிலானது மேற்கண்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில், 2-ஆம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் 8 மற்றும் 11 பொதுப் பெட்டிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
நாகர்கோவிலில் இருந்து 2 அம்ரித் பாரத் ரயில்
ஏற்கெனவே, ஞாயிற்றுக்கிழமை தோறும் நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக மேற்குவங்க மாநிலம் நிஜஜல்பைகுரி ரயில் நிலையம் வரை ஒரு அமிர்த் பாரத் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. தற்போது, இயக்கப்படும் ரயிலுடன் சேர்த்து, நாகர்கோவிலில் இருந்து 2 அம்ரித் பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே ஈரோடு வழித்தடத்தில் முதல் அம்ரித் பாரத் ரயில் சேவை நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது, மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் இடையே 4 அம்ரித் பாரத் ரயில் சேவை அண்மையில் தொடங்கியது.
மேலும் படிக்க: தமிழகம்-மேற்கு வங்கம் இடையே அம்ரித் பாரத் ரயில்கள்.. கால அட்டவணையை வெளியிட்ட தெற்கு ரயில்வே!!
இரு மாநில மக்கள் பயன்பெறும் வகையில்…
தற்போது, கூடுதலாக கேரள மாநிலம், திருவனந்தபுரம் மற்றும் சென்னை தாம்பரம் இடையே மற்றொரு அம்ரித் பாரத் ரயில் சேவை நாளை முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதனால், கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த அதிலும், தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த பொது மக்கள் மிகவும் பயன்பெறும் வகையில் இந்த ரயில் சேவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்த ரயிலானது மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இதற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட அம்ரித் பாரத் ரயிலில் குளிர்சாதன வசதியுடன் கூடிய இருக்கைகள் மட்டுமே நடைமுறையில் இருந்தது.
தேஜ கூட்டணி பொதுக்கூட்டத்துக்கு வரும் மோடி
தற்போது, பயன்பாட்டுக்கு வரவுள்ள இந்த அம்ரித் பாரத் ரயிலில் படுக்கை வசதி, இருக்கை வசதி உள்ளது. மேலும், பொது மக்களின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமரா, அவசர அழைப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த ரயிலில் உள்ளன. மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தரும் பிரதமர் மோடி முன்னதாக இந்த ரயில் சேவை திருவனந்தபுரத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் இருந்து வெளியேறுகிறது ஏர் இந்தியா நிறுவனம்…சென்னை-துபாய் விமான சேவை நிறுத்தம்…என்ன காரணம்?