கார்த்திகை தீபம்: பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முக்கிய கட்டுப்பாடு – விவரம் இதோ
Karthigai Deepam : தமிழகத்தில் கார்த்திகை தீபம் பண்டிகை டிசம்பர் 3, 2025 அன்று வெகு சிறப்பாக கொண்டாடப்படவிருக்கிறது. இந்த நிலையில் பழனியில் உள்ள தண்டாயுதபாணி திருக்கோவிலில் பக்தர்களுக்கு முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
பழனி, டிசம்பர் 2 : தமிழகத்தில் டிசம்பர் 3, 2025 அன்று கார்த்திகை தீபம் (Karthigai Deepam) வெகு சிறப்பாக கொண்டாடப்படவிருக்கிறது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீப நிகழ்வில், தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தமிழக அரசு திருவண்ணாமலையில் (Thiruvannamalai) பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. கனமழை பெய்து வரும் நிலையில், பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மட்டுமல்லாமல், கார்த்திகை தீபம் தினத்தன்று தமிழக முழுவதும் உள்ள முருகன் கோவில்களிலும் பக்தர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம்.
பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு
கார்த்திகை தீப தினத்தன்று திருவண்ணாமலை மட்டுமல்லாது முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் முருகனை வழிபடுவது நம் வாழ்க்கையில் அனைத்து நன்மைகளும் நடக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்த நிலையில் பழனியில் உள்ள தண்டாயுதபானி கோவிலில் பக்தர்கள் வழிபட முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : திருவண்ணாமலையில் பெளர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் எது… கோவில் நிர்வாகம் அறிவிப்பு!
அதன் படி, டிசம்பர் 3, 2025 அன்று கார்த்திகை தீப தினத்தன்று பக்தர்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பழனி மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. பழனி முருகன் கோயிலில் டிசம்பர் 3, 2025 அன்று ஒருநாள் மட்டும் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் பக்தர்கள் வருகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்துள்ளன.
பஞ்சாமிருத விற்பனையில் புதிய சாதனை
பழனி தண்டாயுதபானி கோயிலின் பிரசாதமாக பஞ்சாமிர்தம் விளங்குகிறது. இங்கு கிடைக்கும் சுவை மிகு பஞ்சாமிர்தத்தை பக்தர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். பழனி முருகன் கோயில் பிரசித்தி பெற்ற பஞ்சாமிர்தம் கடந்த 2019 ஆம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 27, 2023 அன்று 1, 79, 283 பஞ்சாமிருத ஜார்கள் விற்பனை செய்யபபட்டதே இதுவரை அதிகபட்சமாக கருதப்பட்டது.
இதையும் படிக்க : கார்த்திகை தீபத் திருவிழா… தயாராகும் திருவண்ணாமலை… என்னென்ன ஏற்பாடுகள்?
இதனை நவம்பர் 19, 2025 அன்று முறியடிக்கப்பட்டது. அன்றைய தினம் மட்டும் 1,98,480 பஞ்சாமிருத ஜார்கள் விற்பனையானது. இந்த நிலையில் இந்த சாதனை அடுத்த சில நாட்களிலேயே முறியடிக்கப்பட்டது. கடந்த நவம்பர் 21, 2025 அன்று மட்டும் ஒரே நாளில் 2,65,940 பஞ்சாமிருத ஜார்கள் விற்கப்பட்டன. மேலும் பழனி முருகன் கோவிலில் உண்டியல்கள் நிரம்பியதால் கடந்த நவம்பர் 19 மற்றும் 20, 2025 ஆகிய இரண்டு நாட்களாக உண்டியலில் உள்ள காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இந்த பணியில் தேவஸ்தான ஊழியர்கள், வங்கி அதிகாரிகள், கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இந்த நிலையில், அதில், 4 கோடியே 38 லட்சத்து 75 ஆயிரத்து 257 ரூபாய் பணமும், 109 சவரன் தங்கம் மற்றும் 33,153 கிராம் வெள்ளி ஆகியவை வருவாயாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



