திருவண்ணாமலையில் பெளர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் எது… கோவில் நிர்வாகம் அறிவிப்பு!
tiruvannamalai girivalam auspicious time திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் உண்ணாமுலையம்மன் கோயிலில் பெளர்ணமி கிரிவலம் வருவதற்கான உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கார்த்திகை தீபத் திருவிழா, பெளர்ணமி கிரிவலம் அடுத்தடுத்து வருவதால் 45 லட்சம் பக்தர்கள் வரை தரிசனத்துக்காக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் உண்ணுமுலையம்மன் கோவிலில் மாதம் தோறும் பௌர்ணமி கிரிவலம் மற்றும் பெளர்ணமி சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கமாகும். இந்த நிகழ்வில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவு உள்ள கிரிவலப் பாதையில் கிரிவலம் வருவர். இதில், சில பக்தர்கள் பௌர்ணமி தினம் தொடங்குவதற்கு முன்பாகவே தங்களது கிரிவலத்தை தொடங்கி பௌர்ணமி தினத்தன்றும், பௌர்ணமிக்கு மறுநாள் வரையும் கிரிவலம் வருவர்.
டிசம்பர் மாத பெளர்ணமி தினம்
இதில், பக்தர்களின் வசதிக்காக பௌர்ணமி கிரிவலத்தையொட்டி, அருணாச்சலேஸ்வரர் உண்ணாமுலையம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் கிரிவலம் வருவதற்கான உகந்த நேரத்தை ஒவ்வொரு மாதமும் அறிவிப்பது வழக்கமாகும். அதன்படி, இந்த மாத பௌர்ணமி நாளை மறுநாள் வியாழக்கிழமை (டிசம்பர் 4) தொடங்கி வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) வரை நீடிக்கிறது.
மேலும் படிக்க: கார்த்திகை மாதம்: முருகன் அருளைப்பெற இந்த 6 நாட்கள் மிக முக்கிய நாளாகும்!!
பெளர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம்
எனவே, பெளர்ணமியையொட்டி, வியாழக்கிழமை காலை 7:55 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 3:55 மணி வரை பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பக்தர்கள் கோயில் நிர்வாகத்தின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. இதனிடையே, நாளை (டிசம்பர் 3) புதன்கிழமை கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட உள்ளது.
45 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ய வாய்ப்பு
இதில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் 2668 அடி உயரம் உள்ள மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. இதனால், கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் பௌர்ணமி கிரிவலம் அடுத்தடுத்து வருவதால் பக்தர்கள் அதிக அளவில் கோவிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 35 லட்சம் முதல் 45 லட்சம் பக்தர்கள் தரிசனத்துக்காக கோவிலுக்கு வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம்… நாளை கொடியேற்றத்துடன் துவக்கம் – 10 நாட்கள் நடைபெறும் நிகழ்வு
பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகள்
பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல் துறை, அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளன. மேலும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார், பேருந்து, வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதற்காக தனித் தனியே பார்க்கிங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவல் துறை உயர் அதிகாரிகள் உள்பட 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



