சிப்காட் தண்ணீர் தொட்டியில் விஷவாயு தாக்குதல்.. வடமாநில தொழிலாளி பலி.. 4 பேர் உயிருக்கு போராட்டம்!
Gummidipoondi Poisonous Gas Attack Worker Dies: திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலையில் தண்ணீர் தொட்டியில் விஷவாயு தாக்கியதில் ஒரு வடமாநில தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 4 தொழிலாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூரில் விஷவாயு தாக்கி ஒருவர் பலி
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய்கண்டிகை பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இங்கு, தனியாருக்கு சொந்தமான எத்தனால் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், தொழிற்சாலையில் உள்ள தண்ணீர் தொட்டியை சில தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, வட மாநிலத்தை சேர்ந்த தனஞ்ஜெய் என்ற இளைஞர் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கினார். அப்போது, சிறிது நேரத்திலேயே அவர் தொட்டிக்குள் மயங்கி விழுந்தார். இதை பார்த்த சக தொழிலாளர்கள் அவரை மீட்பதற்காக உள்ளே இறங்கினர். ஆனால், அவர்களும் விஷவாயு தாக்கி அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இது குறித்து, சிப்காட் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விஷ வாயு தாக்கி ஒரு தொழிலாளி உயிரிழப்பு
அதன் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சிப்காட் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தண்ணீர் தொட்டிக்குள் மயங்கி கிடந்த 5 தொழிலாளர்களையும் மீட்டு மஞ்சங்கரணையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில், வடமாநில இளைஞர் தனஞ்ஜெய் ஆபத்தான நிலையில் இருப்பதால் தீவிர சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும் படிக்க: நொடிப்பொழுதில் நேர்ந்த கோர சம்பவம்.. அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து.. ஓட்டுநர் பலி.. 40 பயணிகள் காயம்!
உயிருக்கு ஆபத்தான நிலையில் 4 தொழிலாளர்கள்
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பாதிரிவேடு போலீசார் மருத்துவமனைக்கு சென்று உயிரிழந்த தனஞ்ஜெய்யின் சடலத்தை மீட்டு உடல் கூராய்வுக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில், மூச்சு திணறல் ஏற்பட்ட சக தொழிலாளர்களாக 4 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிப்காட் அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழப்பு அதிகரிக்குமோ என அச்சம்
கும்மிடிப்பூண்டி அருகே செயல்பட்டு வரும் சிப்காட் தொழிற்சாலையில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொழிலாளர்கள் முயன்ற போது விஷவாயு தாக்கி ஒரு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மட்டும் இன்றி சக தொழிலாளர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும், விஷ வாயு தாக்குதலால் உயிரிழப்பு கூடுமோ என்று அஞ்சப்படுகிறது. உயிரிழந்த வட மாநில தொழிலாளியின் குடும்பத்தினருக்கு போலீசார் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கல்லூரி மாணவிகள் செய்த பகீர் காரியம்.. சினிமா பாணியில் நடந்த துணிகரக் கொள்ளை.. திடுக் தகவல்!!