வீடு புகுந்து பெண்ணை கட்டி போட்டு நகை கொள்ளை.. 10 நாள் தேடுதல் வேட்டையில் 4 பேர் அதிரடி கைது!
Tirunelveli Jewelry Theft Arrest : நெல்லை மாவட்டத்தில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி கட்டிப்போட்டு விட்டு 29 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்ற சிறுவன் உள்பட 4 பேரை முன்னீர்பள்ளம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஐ. ஆர். டி. பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த ஏப்ரல் 18- ஆம் தேதி இரவு புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு, இருந்த பெண்ணை தாக்கி அவரை கட்டிப்போட்டு விட்டு வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். இந்த கொள்ளை சம்பவம் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர். பின்னர், கட்டி போடப்பட்ட பெண்ணை அக்கம் பக்கத்தினர் அவிழ்த்து விட்டனர். இதைத் தொடர்ந்து, முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தடயங்களை சேகரித்த விரல் ரேகை நிபுணர்கள்
மேலும், விரல் ரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது தொடர்பாக, முன்னீர்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், அந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் காட்சியை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வந்தனர். இதில், நகை திருடிய மர்ம கும்பலின் உருவம் பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து, சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அண்டோ ஆரோக்யராஜ் தலைமையில் முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கும்.. மழையும் இருக்கு.. வானிலை அப்டேட் இதோ..




தூத்துக்குடியை சேர்ந்த 4 பேர் கைது
இதில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிவா ( 26 வயது), வீர சங்கிலி ( 20 வயது), இசக்கி முத்து ( 21 வயது), மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட ஒரு சிறுவன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 29 சவரன் திருட்டு நகைகளை போலீசார் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, கைதான 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த சிறுவன் மட்டும் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார்.
போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல்
தூத்துக்குடியை சேர்ந்த இவர்கள் இந்த பகுதியில் கடையில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், முன்னீர்பள்ளம் வழியாக சென்ற போது, சம்பந்தப்பட்ட வீட்டில் இருந்த பெண் அணிந்திருந்த நகையை நோட்டமிட்டு அந்த நகைகள் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி, சம்பவத்தன்று இரவு திட்டமிட்டு வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகையை கொள்ளையடித்து சென்றிருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் படிக்க: புதுச்சேரியில் இருந்து 4.5 லிட்டர் மது கொண்டு வர அனுமதி?.. குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த காவல்துறை!!