‘SIR பணிகளுக்கு ஒரு மாத காலம் போதுமானது’.. சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி!!
Edappadi Palaniswami: பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு பொதுமக்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதன் மூலம் தங்கள் கூட்டணி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

எடப்பாடி பழனிசாமி
சேலம், நவம்பர் 15: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (Special intensive revision) மூலம் போலியான 60 லட்சம் வாக்குகள் வரை நீக்கப்படலாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்து வருகிறது. தமிழகத்தில் இந்த பணி கடந்த நவ.4ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வீடு, வீடாக சென்று விண்ணப்பங்ககளை வழங்கி வருகிறார்கள். தொடர்ந்து, டிச.4ம் தேதி இப்பணிகள் நிறைவு பெற உள்ளன. ஆனால், இந்த சிறப்பு திருத்த பணியில் குழப்பங்கள் இருப்பதாக ஆங்காங்கே குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அதோடு, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களில் ஒரு சிலருக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.
Also read: வெற்றிக்கு காரணம் இதுதான்…. பீகார் தேர்தல் வெற்றிக்கு பிறகு பிரதமர் மோடி கருத்து
இதனிடையே, தமிழகத்தில் ஒரு மாதத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எவ்வாறு முடிக்க முடியும் என பல்வேறு கட்சித் தலைவர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதோடு, தேர்தலுக்கு பின் இப்பணிகளை தொடருமாறு வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, பல்வேறு தீர்மானங்களையும் திமுக நிறைவேற்றியுள்ளது. தொடர்ந்து, SIRக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
ஒரு மாத காலம் போதும்:
இதுதொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதற்காக திமுக பல்வேறு காரணங்களை கூறி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். SIR பணிகளுக்கு ஒரு மாத காலம் என்பது போதுமானது என்று கூறிய அவர், முறைகேடாக வாக்காளர்களை சேர்ப்பது திமுகவுக்கு கைவந்த கலை என்றும் குற்றஞ்சாட்டினார்.
60 லட்சம் வாக்குகள் நீக்கப்படலாம்:
மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் சதி செய்து பீகாரில் ஜெயித்தார்கள் என்பது சரியல்ல என்று கூறிய அவர், அப்படி அவர்கள் கூறுவது போல் முறைகேடாக வாக்காளர்களை சேர்க்கலாம், ஆனால் அவர்களை வாக்களிக்க வைக்க முடியாது என்றும் விளக்கமளித்தார். அதோடு, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மட்டும் 31,000 வாக்குகளை தாங்கள் நீதிமன்றம் சென்றதால் நீக்கப்பட்டதாக கூறிய அவர், ஒரு தொகுதியில் இவ்வளவு வாக்குகள் என்றால், அனைத்து தொகுதிகளுக்கும் சேர்த்து 60 லட்சம் வாக்குகள் கூட வரலாம், அதில் எந்த தவறும் இல்லை என்று அவர் கூறினார்.
Also read: நெருங்கும் தேர்தல்: மீண்டும் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது இந்தக் கட்சி, அந்தக் கட்சி என பார்க்காமல், நேர்மையான முறையில் வாக்காளர்கள் இடம் பெறும் வகையில் நடைபெற வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், திமுக SIRக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, BLO உடன் திமுகவினர் தான் சென்று வருகின்றனர். நாங்களும் பார்த்துக்கொண்டிருக்கிறோம் மற்ற கட்சியினரை விட திமுகவினர் தான் அதிகம் இப்பணிகளுக்கு சென்று வருகின்றனர் என்றும் அவர் சாடியுள்ளார்.